Thursday, August 13, 2009

விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறை நீக்க நடவடிக்கை

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 'விசா' வழங்கும் நடைமுறையை நீக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு முன்வைத்துள்ள யோசனையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது.

இவ்வாறு விமானநிலையத்தில் வைத்து விசாவை வழங்குவதற்குப் பதிலாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்கள் ஊடாகவே விசாவை வழங்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு சிபாரிசு செய்துள்ளது.

உல்லாசப் பயணிகள் என்ற பெயரில் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் நுழைவதற்கு இவ்வாறு விசா வழங்கும் நடைமுறை வழிவகுப்பதாக அமைந்துவிடலாம் என்பதால் இம்முறையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது.

உல்லாசப் பயணிகளின் அதிக வரவுக்காக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கும் போது இலங்கைக்குள் நுழைவதற்கான விசாவை வழங்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

அண்மைக்காலத்தில் உல்லாசப் பயணிகள் என்ற பெயரில் வந்த 309 வெளிநாட்டவர்கள் வேறு நோக்கங்களுக்காக வந்திருந்தமை

கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்களை புகைப்படும் எடுக்கும் திட்டமொன்றை அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.

உல்லாசப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டிற்குள் உட்பிரவேசிக்கும் நபர்கள் நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அவர்களை அடையாளம் காண்பதற்காக புகைப்படங்கள் எடுக்க திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com