Tuesday, August 11, 2009

அடையாளம் காணப்பட்ட கிராமங்களுள் ஐந்து கிராமங்களில் கண்ணிவெடிகள்

மீள்குடியேற்ற பணிகள் துரிதம் வவுனியா அரசாங்க அதிபர்

வன்னியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக அடையாளம் காணப்பட்ட கிராமங்களுள் இன்னும் ஐந்து கிராமங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.இதனால் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்தியிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மீள்குடியேற்றத்திற்காக அடையாளம் காணப்பட்ட 35 கிராமங்களில் ஏழில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டமை தெரியவந்திருந்தது. இதில் இரண்டு கிராமங்களில் ஏற்கனவே அவை அகற்றப்பட்டு விட்டன. எஞ்சிய கிராமங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்தியிருப்பதாக அரச அதிபர் அறிவித்தார்.

அதே நேரம், மீள்குடியேறத் தெரிவானவர்களின் பெயர், விபரங்களைப் பொலிஸாருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதும், மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுமென்றும் அரச அதிபர் கூறினார்.

மீள்குடியேற்றம் சம்பந்தமான மீளாய்வுக் கூட்டமொன்று வவுனியா அரச அதிபர் தலைமையில் நேற்று (11) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டு தற்போதைய முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தனர்.

பாதை அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதுடன் பாட சாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை மீளமை க்கும் பணிகளும் செட்டிக்குளம் மற்றும் வவுனியா தெற்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

இதேநேரம், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் அடுத்த கட்டமாக 68 கிராமங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment