தற்கொலைத் தாக்குதலில் சவூதி இளவரசர் மயிரிழையில் உயிர் தப்பினார்
சவூதி அரேபிய இளவரசரும் துணை உள்துறை அமைச்சருமான முகம்மது பின் நயிப்பை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் என்று சவூதி அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன் விபரம் வருமாறு, அல்-கொய்தா தீவிர வாதிகளுக்கு எதிராக சவூதி அரேபியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. கடந்த மாதம் சவூதி அரேபியா குற்றவியல் நீதிமன்றம் 330 அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு பல்வேறு தண்டனை, அபராதம் போன்றவற்றை விதித்தது. சிலர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டது.
சவூதி அரேபிய அரசின் இந்த நடவடிக்கை அல்-கொய்தா தீவிரவாதிகளை கோபம் அடையச் செய்தது. இந்த நிலையில் கடந்த 19ந் திகதி சவூதி அரேபிய அரசு 44 அல்-கொய்தா தீவிர வாதிகளை கைது செய்தது. அவர்களிடம் இருந்து ஏராளமான எந்திர துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அல்-கொய்தா தீவிரவாதிகளிடம் இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சவூதி அரேபிய உள்துறை தான் இதற்கு காரணம் என்று நினைத்து பழிவாங்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.
இந்த நிலையில் நோன்பு மாத கூட்டுப் பிரார்த்தனைக்கு சவூதி அரேபிய இளவரசரும் துணை உள்துறை மந்திரியுமான முகம்மது பின்நயுப் ஏற்பாடு செய்திருந்தார். பிரார்த்தனை முடிந்ததும் இளவரசரிடம் வாழ்த்து தெரிவிக்கவும் மனு கொடுக்கவும், பலர் அவர் அருகில் சென்றனர்.
அப்போது அல்-கொய்தா தற்கொலை தீவிரவாதி ஒருவன் திடீரென தன் உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபட்டான். இதில் சவூதி இளவரசர் முகம்மதுக்கு காயம் ஏற்பட்டது.
மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். அவரை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அல்-கொய்தா தீவிரவாதிகள் தற்போதுதான் முதன் முதலாக சவூதி அரச குடும்பத்துக்கு எதிராக தற்கொலை தாக்குதல் நடத்தி உள்ளனர்.
நன்றி தினகரன்
0 comments :
Post a Comment