Tuesday, August 4, 2009

ஈ-நியூஸ் ஆசிரியர்கள் வாரமொரு முறை பொலிஸூக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதான உத்தரவு நீக்கம்

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் செயலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டுள்ளார் எனும் சம்பத்தை பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் வழங்கியதான குற்றச்சாட்டின் பேரில் லங்கா ஈ நியூஸ் நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் பெனட் ரூபசிங்க மற்றும் அதன் பிரதம ஆசிரியர் சந்தருவன் சேனாதீர ஆகிய இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மிரிஹானை பொலிசுக்கு ஆஜராகுமாறு விடுக்கப்பட்டிருந்த உத்தரவை கங்கொடவில நீதிவான் வசந்த ஜினதாச நேற்று நீக்க உத்தரவிட்டார்.

மிரிஹானை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று (03) கங்கொடவில நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது மன்றில் ஆஜராகியிருந்த சரேஷ்ட சட்டத்தரணி ஜீ.டீ.குலதிலக்க, 21ஆம் இலக்க குற்றச்சட்ட விசாரணைப் பிரிவுக்கமைய, ஒரு குற்றச் செயல் தொடர்பில் தகவல் வழங்குவது மனித உரிமையாகும். அவ்வாறு தகவல் வழங்காதிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை எடுத்துக்காட்டினார்.

பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள லங்கா ஈ நியூஸ் நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் பெனட் ரூபசிங்க மற்றும் அதன் பிரதம ஆசிரியர் சந்தருவன் சேனாதீர ஆகிய இருவரும் நிரபராதிகளாவர். அவ்விருவரும் 21ஆம் இலக்க குற்றச்சட்ட விசாரணைப் பிரிவின் பிரகாரம் குற்றச் செயலொன்று தொடர்பில் மட்டுமே தகவல் வழங்கியுள்ளனர் என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணியின் வாத விவாதங்களைக் கருத்திற்கொண்ட நீதிவான் இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கவும் உத்தரவிட்டார்.

லங்கா ஈ நியூஸ் நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் பெனட் ரூபசிங்க மற்றும் அதன் பிரதம ஆசிரியர் சந்தருவன் சேனாதீர ஆகிய இருவர் சார்பிலும் சட்டத்தரணிகளான விதுர மன்ஷநாயக்க, மன்ஜூல பத்திராஜ், ரொஹான் பீரிஸ் ஆகியோருடன் சிரெஷ்ட சட்டத்தரணி ஜீ.டீ.குலதிலக்கவும் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி லங்கா ஈ நியூஸ்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com