எஸ்.எஸ்.பி மகன் விளக்கமறியல்: மனைவி கைது செய்யப்படுவார். பொலிஸ் பேச்சாளர்.
தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் பொருட்டு பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிங்கள மொழியில் விடுக்கப்பட்டுள்ள அவ்வறிக்கையின் சாராம்சம் கீழே.
மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று 17ம் திகதி கடுவல மாவட்ட நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களில் பல்வேறுபட்ட செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவற்றை விளக்கும் பொருட்டு இவ் அறிக்கை வெளியிடப்படுகின்றது.
விசேட பொலிஸ் அணி ஒன்றினால் மிகவும் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டு விசாரணைகளில், சில முக்கியமான சாட்சிகள் நகரப்பகுதியில் இருந்து வெளியே காணப்படுகின்றமையால் சாட்சிகளை பதிவு செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தலைமையில் செயற்பட்டு வரும் பொலிஸ் குழுவினர் 12 சந்தேக நபர்களை கைது செய்து அவர்கள் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 3 உதவி பொலிஸ் பரிட்சகர்கள், 7 பொலிஸ் கொஸ்தாபல்கள் மற்றும் பொலிஸ் சாரதி ஒருவர் அடங்குவதுடன் அவர்கள் நேற்று 17ம் திகதி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கான அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 31ம் திகதி நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
பிரதான சந்தேக நபர் களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை பி அறிக்கை ஊடாக நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டபோது நோயாளியின் நிலமையை நேரடியாக சென்று பார்வையிடுமாறு கடுவல நீதிமன்று கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றிற்கு அறிவுறித்தியது.
அவ் அறிவுறுத்தலைத் தொடர்ந்து நேற்று இரவு களுபோவில வைத்தியாசாலைக்குச் சென்ற கங்கொடவில நீதிவான் சந்தேக நபரின் நிலமைகளை பார்வையிட்டதுடன் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அவ் அறிவுறுத்தலை தொடர்ந்து அங்கு விரைந்த சிறைக்காவலர்கள் முதலாம் சந்தேக நபரான ரவிந்து குணவர்த்தனவை தமது காவலுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், தடுப்புக்காவலில் சந்தேக நபர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்துடன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது மனைவியை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அதன்பொருட்டு பொலிஸ் அத்தியட்சகரின் மனைவி இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
0 comments :
Post a Comment