நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கக்கோரி ஜனாதிபதிக்கு ஜேவிபி கடிதம்.
நாட்டில் உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை அகற்றக்கோரி ஜே.வி.பி யினர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம். ஆக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் ரில்வின் சில்வா அவர்களால் கையொப்பம் இடப்பட்டுள்ள கடிதத்தின் சாராம்சம்.
ஒரு தேசியப் பத்திரிகையில் ஆகஸ்ட் 11, 2009 இல் தெரிவிக்கப்பட்ட செய்தி ஒன்றில் நீங்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அணிவகுப்பாளர்களிடம் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகும்படி கூறியதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல சீக்கிரமே ஜனாதிபதி தேர்தல் வரப்போகிறதென ஊடகங்களின் செய்திகளும் உள்ளன. இந்தச் செய்திகள் எல்லாம் வதந்திகள் வெளிப்படுவதாகவே பிரசுரிக்கப் பட்டுள்ளன.
இருந்தபோதும் நம்பிக்கைவாய்ந்த ஒரு பத்திரிகைச் செய்தியானது 'ஒரு ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகுமாறு' நீங்கள் கூறியதகவே தெரிவித்துள்ளது. ஆனால் நீங்கள் அப்படி ஒரு தேர்தலை நடாத்தும் தார்மீக உரிமையோ மற்றும் 2005 ஜனாதிபதி தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையின் பிரகாரமோ உரிமை உடையவரல்ல.
நீங்கள் அப்பொழுது, பொது ஜன மக்கள் முன்னணியின் அப்போதய பிரதம மந்திரியாகவும் ஜனாதிபதி வேட்பாளராகவும் இருந்து, 8 செப்டம்பர் 2005 இல் அலரிமாளிகையில் பொதுமக்களுக்கு முன்னால் கைச்சாத்திட்ட ஜே.வி.பி யினரோடான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர நாங்கள் விரும்புகின்றோம்.
அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 7 வது பந்தி பின்வருமாறு கூறுகிறது:-
"இலங்கையின் ஜனநாயக நிகழ்வுகளைப் பெரிதாகப் பாதிக்கும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றுவதே முதன்மையானதும் முன்னணியானதும் கடமையென்று ஒத்துக்கொண்டதோடு அதை 6 வது ஜனாதிபதி ஆட்சிக்காலம் முடியுமுன் அகற்றுவதாகவும், கூறியே அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டீர்கள்."
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள 13 அம்சக் கோரிக்கையின் பிரகாரமே ஜே.வி.பி யினராகிய நாங்கள் உங்களை ஜனாதிபதியாகக் கொண்டுவரும் பொறுப்பை எடுத்தோம். நீங்கள் 2005 ஜனாதிபதி தேர்தல் பிரகாரம் பெற்ற மக்கள் ஆணையின் படிக்கு இதை நிறைவேற்றக் கடமைப் பட்டவர்கள்.
நீங்கள் "மகிந்தா சிந்தனை" என்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் 84 பக்கத்தில் "அரசியல் அமைப்புச்சட்டத் திருத்தம்" என்ற அம்சத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றுவதாகவும் வெளியிட்டுள்ளீர்கள்.
இதன் பிரகாரம் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை நடாத்த உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லையாகும். ஆகவே ஜே.வி.பி யோடு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் படிக்கு இந்த ஜனாதிபதிக்காலம் முடிவதற்குள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிமுறையை அகற்ற வேண்டும்.
இந்த ஜனாதிபதிமுறையை யூ.என்.பி அறிமுகப் படுத்திய அன்று தொடக்கம் நாம் அதை எதிர்த்ததோடு இன்றுவரை அதை அகற்றுவதையே கொள்கையாகக் கொண்டு பாடுபட்டு வருகின்றோம் என்பதை நாங்கள் உங்களுக்கு அடித்துச் சொல்ல வேண்டிய ஒரு தேவையுள்ளது.
நீங்களும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை ஜனநாயக நிகழ்வுப்போக்குக்குத் தடையானது என்பதை ஒத்துக்கொண்டவராவீர்கள். நாம் ஜனாதிபதி முறையை இல்லாமற் பண்ணுவதைச் சுலோகமாக வைத்து 1982 இலும் 1994 லிலும் நடுநிலையான வேட்பாளர்களை நிறுத்தினோம்.
ஆனால் 1994 இல் திருமதி சந்திரிக்கா குமாரத்துங்கா, தான் ஜனாதிபதியாக வந்தால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றுவேன் என்று உறுதிமொழி தந்ததால் நாம் எமது வேட்பு மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டோம். அதன் பின்னால் அவரும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்ற விரும்பவில்லை.
நாம் உங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும்பொழுது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றுவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு அந்த ஒப்பந்தத்தைச் செய்தோம்.
நீங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றுவேன் என்று கூறிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டு அதை மகிந்தா சிந்தனை என்ற உங்களது தேர்தல் வேலைத்திட்டத்திலும் வெளிப்படுத்தி அதற்கான மக்கள் ஆணையைப ;பெற்றபின்பு ஜனாதிபதி ஆட்சிக்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு வருடம் இருப்பதற்கு முன்னதாகவே நாட்டின் நலன்கருதி ஜே.வி.பியோடு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அப்பால்போட்டுவிட்டு, மக்கள் ஆணையையும் உதாசீனம்செய்வதானது நன்னெறி பிறழ்ந்த செயலாகும்.
ஆகவே இன்னுமொரு ஜனாதிபதி தேர்தல் வைக்கும் எண்ணத்தைவிட்டுவிட்டு நீங்கள் பொது மக்களுக்கு முன்னால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுதியளித்தவாறு 2005 இல் அதற்கான மக்கள் ஆணையைப் பெற்றதன்படிக்கும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் உங்களைக் கேட்கின்றோம்.
0 comments :
Post a Comment