Tuesday, August 4, 2009

நாளை வவுனியாவிலுள்ள கிழக்கு மாகாண மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை

வவுனியா நிவாரண கிராமங்களில் தற்போது தங்கியுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1445 பேர் நாளை புதன்கிழமை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டம் - 329, அம்பாறை மாவட்டம் - 190, இவர்கள் தவிர்ந்த ஏனையோர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களது பெயர் விபரங்களை தேச நிர்மாண அமைச்சு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்குக் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தது. கிராம சேவையாளர்கள் வதிவிடத்தை உறுதிப்படுத்துமாறும் அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை புதன்கிழமை குறிப்பிட்ட கிராம சேவையாளர்கள் சகிதம் நிவாரணக் கிராமங்களுக்கு அரசாங்க அதிபர்களும் இவர்களை அழைத்துச் செல்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 190 பேரையும் அழைத்து வருவதற்காக 45 கிராம சேவையாளர்கள் அடங்கிய குழுவொன்று இன்று வவுனியா சென்றுள்ளது.

நாளை அழைத்து வரப்படவிருக்கும் குறிப்பிட்ட 190 பேரில், அன்றைய தினம் தமது வீடுகளுக்குச் செல்ல முடியாதவர்களைக் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் அன்றிரவு தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வருவதற்காக அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், புனர்வாழ்வு உதவித்திட்ட பணிப்பாளர் ஏ.எல்.எம். ஷெரீப் மற்றும் 15 கிராம சேவை அலுவலகர்கள் ஆகியோர் இன்று வவுனியா சென்றுள்ளனர்.

வவுனியாவிலிருந்து அழைத்து வரப்படவிருக்கும் 329 பேரில் 180 பேர், வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் வைத்து வாகரை மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்படுவார்கள்.

ஏனையோர் நேரடியாக மட்டக்களப்பு சாகிரா வித்தியாலயத்திற்கு அழைத்து வரப்பட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்படுவர். அன்றிரவு தமது வீடுகளுக்குத் திரும்ப முடியாதவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர்களுக்கான உலர் உணவு நிவாரணப் பொதிகளுடன் அத்தியாவசிய பாவனைப் பொருட்களும் வீடு திரும்பும் போது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி

No comments:

Post a Comment