பணம்கொடுத்து முகாம்களிலிருந்து 50,000 பேர் வெளியேற்றம்
வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் மக்கள் வெளியேறுவது குறித்துக் கண்காணிக்குமாறு பொலிஸ்மா அதிபர், வவுனியாப் பிராந்தியப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களாகச் செயற்பட்டு பின்னர், ஆயுதங்களைக் கைவிட்ட
தற்பொழுது ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தமிழ் கட்சிகளும், ஏனைய முகவர்களும் முகாம்களிலுள்ள மக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உதவுவதாகப் பொலிஸ்மா அதிபர் வவுனியாப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை நலன்புரி நிலையங்களிலிருந்து 50,000 பேர் பணம்கொடுத்து வெளியேறியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்துத் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டுசென்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களிடம் 100,000 ரூபா முதல் 10,000 ரூபாவரை அறவிட்டுக்கொண்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் பல்வேறு முகவர்கள் செயற்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதில் புலனாய்வுத்துறை அதிகாரிகளும் தொடர்புபட்டிருப்பதாக கடந்த வாரம் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், எவ்வளவு பேர் இவ்வாறு பணம் கொடுத்து நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியேறினார்கள் என்பது பற்றிய விபரங்கள் இதுவரை உறுதியாகத் தெரியவில்லையென வவுனியாப் பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமால் லியூகே கூறினார்.
இவ்வாறு வெளியேறியவர்கள் தொடர்பான விபரங்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment