Thursday, August 6, 2009

40,000 இலங்கையர்களுக்கு இத்தாலியில் வதிவு அனுமதி

சட்டவிரோதமாக சென்றோருக்கு மனிதாபிமான அணுகுமுறை
சட்ட விரோதமாக இத்தாலி யில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு வதிவு அனுமதியை வழங்க இத்தாலி அரசு முன்வந்துள்ளது. “நெருக்கடி தவிர்ப்பு சட்ட மூலத்தின் ஊடாக இவ் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக சுமார் 4,000 முதல் 40,000 இலங்கையர்கள் நன்மையடையவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசும்போதே அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இத்தாலியில் இவ்வாறு தங்கியிருக்கும் இலங்கையர் புதிய சட்ட மூலம் அமுலுக்கு வரும் போது தமக்கு புதிய கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இத்தாலியின் ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நெருக்கடி தவிர்ப்பு சட்ட மூலம் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதற்கு எதிர்ப்புகள் வலுத்தன. இதன் காரணமாக சட்ட மூலம் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு 2009 ஓகஸ்ட் 3 ஆம் திகதி இத்தாலிய ஜனாதிபதியினால் கைச்சாத்தும் இடப்பட்டுள்ளது.

உத்தியோக பூர்வமாக சட்ட மூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதுடன் 15 நாட்களில் அமுலுக்கு வரும்.

இச் சட்டத்தின் பிரகாரம் இத்தாலியின் வீட்டுப் பணி உதவியாளர்கள் மற்றும் நோயாளர்களுக்கு வயோதிபர்களு க்கு பராமரிப்பு உதவிகளைச் செய்வோர் போன்றோரை மட்டுமே உள்ளடக்குகிறது. சட்ட விரோதமாக தங்கியிருக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் வதிவு அனுமதியை நீடிப்பதற் கான சாத்திய கூறுகள் இல்லை என்றும் இத்தாலிய அரசு தீர்மானித்துள்ளது.

இத்தாலிய வீடுகளில் பெருமளவிலான இலங்கையர்கள், வீட்டுப் பணியாளர்களாகவும், உதவிச் சேவை வழங்கு வோராகவும் உள்ளனர். இத்தாலிய தொழில் வழங்குனர்களின் நம்பிக்கையை யும் பெற்றுள்ள நிலையில் இவர்களை தொடர்ந்தும் தொழிலுக்கு அமர்த்துவதிலும் ஆர்வம் காட்டு கின்றனர். இதனை இச் சட்ட மூலத்தின் ஊடாக இலங்கை யர்கள் நன்மையடைவர்.

இத்தாலியின் உள்நாட்டலுவல் கள் அமைச்சர் றொபேட்டோ மரோணி மற்றும் பொதுநல சேவை அமைச்சர் மொறிசியோ சக்கோணி ஆகியோர் இத்தாலி யில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் சகல வெளிநாட்டவர்களும் குற்றவியல் தவறை புரிந்துள்ளார்கள் என “நெருக்கடித் தவிர்ப்பு” சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்.

சட்ட மூலத்தில் உள்ள சில சரத்துக்கள் ஐரோப்பிய அரசியல் யாப்புக்கு ஒவ்வாதது என்ற கருத்துபட இத்தாலிய வெளிநாட்டமைச்சுக்கு ரோமிலுள்ள இலங்கைத் தூதரகம் எடுத்துக் கூறியிருந்தது.

இத்தாலிய ஜனாதிபதி ஜியோர்ஜியோ நபோலிரானோவின் இசைவிற்காக சமர்ப்பிக்கப்பட்டபோது மேற்படி கருத்துகள் காரணமாக மேல் மற்றும் கீழ் சபைகளின் மீளாய்வுக்காக திருப்பி அனுப்பப்பட்டது.

வயது முதிர்ந்தவர்களையும், வலது குறைந்தவர்க ளையும் பராமரிப்புக்க அரசு மாற்று வழிவகைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாகையாலும், இது இத்தாலிய பொருளாதாரத்திற்கு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலும் சில அரசியல் கட்சிகளிலும் எதிர்ப்புகள் இருந்தன.

அரசியல் கட்சிகளினதும், தூதரகங்களினதும் எதிர்புகளினாலும் முதியோருக்கான தாக்கம் என்பதையும் கருத்தில் கொண்டும், இத்தாலி அரசு ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளிலிருந்து வந்து தொழில் புரியும் பல்லாயிரக்கணக்கான வீட்டுப் பணியாளர்கள், சேவை புரிவோர் தொடர்ந்தும் தங்குவதற்காக சட்ட ரீதியாக இத்தாலியில் தங்கும் விதத்தில் விசேட வதிவு அனுமதி வழங்கும் விதத்தில் முன்னைய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கமைய செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து 30 ஆம் திகதிக்குள் இத்தாலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு விண்ணப்பிக்க முடியும்.

வீட்டுப் பணியாளர் அல்லது பராமரிப்புகளில் ஈடுபட்டுள்ளவர் ஒரு குடும்பம் என்ற வகையில் ஒரு வதிவு அனுமதி பத்திரம் அல்லது தனி நபர் என்ற வகையில் இரண்டு வதிவு அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பிப்பவர் 2009 ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக சேவையில் அமர்த்தப்பட்டுள்ள மையையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இலங்கையர்களின் நன்மை கருதி இத்தாலி ரோமிலுள்ள இலங்கைத் தூதரகத்தை இரவு 10 மணி வரை திறந்து வைக்குமாறும் வெளிநாட்டமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
நன்றி தினகரன்

No comments:

Post a Comment