Friday, August 14, 2009

2020-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாற ஊழலற்ற ஆட்சி அமையவேண்டும். -அப்துல்கலாம்-

2020-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாற ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.

கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழக அளவில் தேர்தல் ரேங்க் பெற்ற மாணவ-மாணவிகள் பாராட்டு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் வரவேற்று பேசினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.எஸ்.ஆர்.கண்ணையன் சால்வை அணிவித்து கவுரவித்தார். விவின் குழுமங்களின் முதன்மை நிர்வாகி சதீஷ்பிரபு நினைவுப்பரிசு வழங்கினார்.

பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அப்துல்கலாம் சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

நம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பெரிய லட்சியம் வேண்டும். `உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்று திருவள்ளுவர் கூறியதுபோல் பெரிய அளவில் லட்சியம் இருக்கவேண்டும். அந்த லட்சியம் வெற்றிபெற அயராது உழைக்கவும் வேண்டும். மாணவ-மாணவிகளாகிய நீங்கள், என்னுடைய வீட்டில் பூஜையறை அல்லது பிரார்த்தனை இடமருகில் 20 நல்ல புத்தகங்களை வைத்து நூலகத்தை ஆரம்பிப்பேன் என்று உறுதிகொள்ளவேண்டும்'.

அதேபோல் பெற்றோர்கள், `என்னுடைய மகன், மகள் வைக்கும் 20 புத்தகம் கொண்ட நூலகத்தை 200 புத்தகமாக மாற்ற உறுதுணையாக இருப்பேன்' என்றும் பெரியவர்கள், `என்னுடைய பேரன், பேத்திகளுடைய 200 புத்தகம் கொண்ட நூலகத்தை 2 ஆயிரம் புத்தகமாக மாற்ற எங்கள் குடும்பத்தினர் உறுதுணையாக இருப்போம்' என்று உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.

எங்கள் வீட்டின் நூலகம்தான் பரம்பரை சொத்து, அறிவுக்களஞ்சியம் என்று நினைத்து அந்த முயற்சியை அனைவரும் செய்யவேண்டும். அதுதான் நாட்டின் அறிவுப்புரட்சிக்கு அடிப்படையாக இருக்கும். ஒழுக்கம், புதுமையான அறிவு, தோற்றுவிக்கும் திறன் கொண்ட அறிவு, மதிப்பளிக்கும் தன்மை, ஒருமைப்பாடு உணர்வு கொண்ட அறிவுத்திறன்கள் மாணவ-மாணவிகளிடத்தில் இருக்கவேண்டும்.

இந்தியாவை 2020-ல் வல்லரசாக மாற்ற கிராமத்துக்கும், நகரத்துக்கும் உள்ள சமூக பொருளாதார இடைவெளியை குறைக்கவேண்டும். சுத்தமான குடிநீர், எரிசக்தி அனைவருக்கும் சமமாக கிடைக்கவேண்டும். விவசாயம், தொழில் சேவை துறைகளை ஒருங்கிணைக்கவேண்டும். கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.
தரமான மருத்துவ வசதி கிடைக்கவேண்டும், ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும். வறுமை, கல்லாமை, பெண்கள் கொடுமை போன்றவை ஒழியவேண்டும். வளமான பாதுகாப்பு, சுகாதாரம் வாய்ந்த நாடாக இந்தியா மாறவேண்டும். வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற திட்டங்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கவேண்டும். இவையனைத்தையும் நிச்சயமாக செய்தால் உணவு, சுகாதாரம் உள்பட அனைத்திலும் இந்தியா வல்லரசாக மாறும். கல்வி நிறுவனங்கள் சார்பில் கிராமப்புற மக்களை மேம்படுத்தும் வகையில் புறா திட்டத்தின் கீழ் கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு முன்னாள் துணை ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார். பின்னர் அவரிடம் மாணவ-மாணவிகள் கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் உற்சாகத்துடன் பதில் அளித்தார்.

No comments:

Post a Comment