சட்டவிரோமாக 20000 பேர் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
வடபகுதியில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களில் 20,000 பேர் சட்டவிரோதமான முறையில் வெளியேறியிருப்பதாக அங்கு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களின் மூலம் தெரியவந்துள்ளது.
நலன்புரி நிலையங்களிலுள்ள பலர் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொண்ட தமிழ் குழுக்களுக்குப் பணம் செலுத்தி சட்டவிரோதமான முறையில் வெளியேறிவருவதாக அண்மையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இக்குற்றச்சாட்டுக் குறித்து விசாரிக்கும் நோக்கில் நலன்புரி நிலையங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு முடியும் தறுவாயிலுள்ள நிலையில் முகாம்களிலிருந்து 20,000 பேர் சட்டவிரோதமாக வெளியேறியிருப்பது தெரியவந்திருப்பதாக வவுனியா கச்சேரியைச் சேர்ந்த அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
எனினும், இவர்கள் எவ்வாறு வெளியேறினார்கள் என்பது தொடர்பாக இதுவரை எந்தத் தகவல்களும் தெரியவில்லையென அவர் தெரிவித்தார்.
அதேநேரம், வன்னியிலிருந்து மக்களுடன் மக்களாக வெளியேறிய விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் இவ்வாறு பணம்கொடுத்து வெளியேறியிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வைத்தியசாலைக்குச் சிகிச்சைபெறுவதாகக் கூறிச் சென்ற பலர் முகாம்களைவிட்டுத் தப்பியோடியிருப்பதாகவும் அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment