Wednesday, July 8, 2009

புலிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே பொய்யான தகவல்களை வழங்கினோம்

மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின்போது புலிகளின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கத்திற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஊடகங்கள் ஊடாக வழங்க நேர்ந்ததாக புலிகளின் பிடியில் இறுதி வரையிருந்து சேவையாற்றிய ஐந்து டாக்டர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.

உண்மைக்குப் புறம்பான தகவல்களை அப்பொழுது வழங்கியமைக்காக தாங்கள் தற்பொழுது வருந்துவதாக தெரிவித்த அவர்கள், புலிகளின் துப்பாக்கி முனையில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அச்சுறுத்தப் பட்டமையினாலேயே உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

புலிகள் சில சந்தர்ப்பங்களில் தங்களுக்குத் தெரியாமல் தங்களது பெயர்களை பயன்படுத்தி பலாத்காரமாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கும் இணைய தளங்களுக்கும் வழங்கியதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின் போது புலிகளின் பிடியில் இறுதிவரையிருந்து சேவையாற்றிய வண்ணம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கிய ஐந்து டாக்டர்களும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு ஊடகவியலாளர்களை சந்தித்து தமது உண்மை நிலைமைகளை விபரித்தனர்.

இரகசிய பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் சின்னத்துரை சிவபாலன், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் தங்கமுத்து சத்திய மூர்த்தி மற்றும் முல்லைத்தீவு சுகாதார சேவை அதிகாரி டாக்டர் கதிரவேல் இளஞ்செழியன் வள்ளவன் ஆகியோரே இதில் கலந்து கொண்டனர்.

இவர்கள் இங்கு மேலும் தகவல் தருகையில்:-

நாங்கள் அரசாங்க வைத்தியர்களாக இருந்த போதிலும் புலிகளின் ஆயுதங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலிலேயே இறுதிவரை புலிகளுக்கும் சேவையாற்ற நேர்ந்தது.

சிவிலியன்களின் நலனை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய நாங்கள் நிர்ப்பந்தம் காரணமாக புலிகளுக்கும் சிகிச்சை வழங்க வேண்டியேற்பட்டது. எனினும் இறுதி வரை நாங்கள் அரசாங்கத்தின் சம்பளத்தையே பெற்றுக் கொண்டோம்.

நாங்கள் எமது சொந்த விருப்பத்திற்காக இவ்வாறு செயற்படவில்லை. எம்மையும், எமது குடும்பத்தையும் பாதுகாக்க இது தவிர எமக்கு வேறு வழியில்லை.

புலிகளின் தாக்குதல்கள் காரணமாகவே அதிகமானவர்கள் காயமடைந்தனர். எனினும் உயிரிழந்தவர்களதும், காயமடைந்தவர்களதும் எண்ணிக்கை தொடர்பில் மிகைப்படுத்தி கூறும்படியே புலிகள் அதிகமான சந்தர்ப்பங்களில் வற்புறுத்தி வந்துள்ளனர்.

உண்மையாக இந்தப் பிரதேசத்தில் மருந்து தட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் அவ்வாறு கூறும் பட்சத்திலே பலரது கவனத்தை ஈர்த்து யுத்தத்தை நிறுத்த வழி செய்ய முடியும் என்றனர்.

எட்டு தடவைகள் அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக மருந்து, சத்துணவு போன்றவற்றை அனுப்பிவைத்திருந்தது. அவற்றில் பெரும் தொகையான மருந்துகளை புலிகள் எடுத்துச் சென்றனர் என்றனர்.

நாங்கள் காயமடைந்த சிவிலியன்களுக்கே அதிகமாக சிகிச்சை வழங்கியுள்ளோம். ஏனெனில் புலிகளுக்கு சிகிச்சை வழங்கவென தனியான வைத்தியசாலைகளை புலிகளின் மருத்துவக் குழுவினர் வைத்திருந்தனர். தேவையேற்படின் மாத்திரமே எம்மிடம் கொண்டு வருவார்கள் என்று டாக்டர் சண்முகராஜா தெரிவித்தார்.

இறுதியாக வந்த மூன்று கப்பல் பொருட்களையும் நாங்கள் பெற்றுக் கொண்டோம்.

எமது வைத்தியசாலையின் சுற்றுப் புறங்களில் புலிகளின் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது உண்மைக்கு புறம்பானது. எனினும் ஷெல் ஒன்று வைத்தியசாலைக்கு அருகில் வந்து விழுந்தது. நாங்கள் ஐ.சி.ஆர்.சி.க்கு அறிவித்தோம்.

பின்னர் புலிகளின் முகாம்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு அவர்கள் கூறினார்கள்.

நாங்கள் பல முறை தப்பிவர முற்பட்ட போதும் அது பலனளிக்க வில்லை. எமது குடும்பத்தினரும் உறவினர்களும் இங்கு சிக்கிக் கொண்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் நாங்கள் சேவையாற்றி வந்தோம்.

படையினர் முன்னேறி வர வர நாங்கள் எமது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டோம். இறுதியாக பொக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் தற்காலிக வைத்தியசாலைகளை அமைத்து சேவையாற்றினோம்.

இறுதியாக பாதுகாப்புப் படையினர் நாங்கள் இருக்கும் இடத்தை நெருங்கினர். வெடிச் சத்தம் குறைந்த நிலையில் நாங்கள் இருக்கும் இடத்தை ஐ.சி.ஆர்.சி. ஊடாக அறிவித்து எம்மை பாதுகாக்குமாறு தெரிவித்தோம். மே மாதம் 15ம் திகதி நாங்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். எங்களை பாதுகாத்தமைக்கான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றனர்.

நன்றி தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com