Tuesday, July 7, 2009

முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் எஸ்.எஸ்.கணேந்திரன், யாழ் நகர வாழ் மக்களுக்கு

இலங்கையில் தலைவிரித்தாடிய பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ள ஒரு நிலைமை உருவாகியுள்ளபோதிலும் பலவிதமான துன்பங்களையும் புலிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இறுதிப்போரில் சிக்குண்டு உயிரிழந்தும் அங்கவீனமாகியும் உள்ள எமது உறவுகளின் துயரங்களை எண்ணி ஏங்கும் மனநிலை ஒருபுறத்திலும் அகதி முகாம்களில் இன்னும் தங்கியிருக்கும் எமது உறவுகளையிட்டு வேதனைகள் மறுபுறத்திலும் சுமந்துகொண்டு வாழும் உங்களுக்கு இந்தத் தேர்தல் இன்னும் சிலகாலம் தாமதப்படுத்தப் பட்டிருக்கலாம் என்பது எனது கருத்தாக இருந்தாலும் இந்தத்தேர்தல் உங்களுக்கு மிக முக்கியமானது என்பதை மறந்துவிடக்கூடாது.

1998ம் ஆண்டு நடைபெற்ற யாழ் மாநகரசபைத் தேர்த்லில் உங்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல் நகர மக்களுக்கு தேவையான அடிப்படைத்தேவைகளைக் கூட செய்ய விடாமல் பலவிதங்களில் தடைகளை மேற்கொண்டதோடு உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் உயிர்களுக்கு வலைவிரித்திருந்த புலிகளின் சவால்களுக்கு முகம்கொடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் கட்சி பேதங்களை மறந்து கருத்து முரண்பாடுகளை கலைந்து பரஸ்பர புரிந்துணர்வுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை எந்தவொரு தீர்மானத்தினையும் ஏகமனதாகவே நிறைவேற்றி முடிந்தவரையில் யாழ் மாநகரசபையை சிறப்பாக வழிநடாத்த நீங்கள் வழங்கிய ஒத்தாசைகள் இன்றும் எனது மனதில் பதிந்துகிடக்கிண்றது.

ஆனாலும் இன்று நீங்கள் எதிர்நோக்கும் இந்தத் தேர்தல் மிகவும் வித்தியாசமான ஒரு தேர்தலாக அமையப்போகிண்றது என்பதே உண்மை. ஆரம்பம் முதல் கடந்த பாராளுமண்றத் தேர்தல் வரை எந்தத் தேர்தலானாலும் தனித்தே போட்டியிட்ட ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியுட்பட சில கட்சிகள் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிண்றன.

புலிகளினால் உருவாக்கம் செய்யப்பட்டு வட கிழக்கில் பாராளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டு அதன் பின்னர் தத்தமது பிரதேச வாழ் மக்களின் தேவைகளை மறந்து புலிகளுக்கு துதிபாடுவதும் அவர்கள் சொல்வதைச் செய்வதிலும், ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று புலிகளுக்கு பிரச்சாரங்களை மேற்கொள்வதோடு தமது குடும்பங்களையும் வெளி நாடுகளில் குடியமர்த்தி சுகபோக வாழ்க்கையை அங்குரார்ப்பணம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சியிலும் மீண்டும் தேர்தல் காலக் கடைகளை திறந்துவைத்துள்ளனர். மறுபுறத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவையும் போட்டியிடுகிண்றன.

ஆளும் அரசுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் பல அபிவிருத்திகளை துரிதகதியில் நடைமுறைப்படுத்தலாம் என்பது அரசியல் ரீதியாக சரியாகப்பட்டாலும் இன்று புலிகளின் சர்வாதிகார அடக்குமுறை முழுமையாக அழிக்கப்பட்டுள்ள போதிலும் இனப்பிரச்சனைக்கான தீர்வு இதுவரை எட்டப்படாத நிலையில் தமிழ் இஸ்லாமிய மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட்டு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் சுதந்திரமாக வாழ ஆளும் அரசு மேற்கொள்ளும் சிறப்பான பணிகளுக்கு ஆதரவு வழங்குவது என்பது சிறப்பாக இருந்தாலும் அரசுடன் சேர்ந்து போட்டியிடுவதானது யாழ மாநகர சபை பிரதேசத்தில் வாழும் தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களின் அடையாளங்கள் இழக்கப்பட்டுவிடும் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

இக் க்ருத்தினை முன்வைப்பதால் நான் இனவாதம் பேசுவதாக யாரும் கருதிவிடமுடியாது. காரணம் புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்ட பின்னரும் இன்று அரசுடன் இணைந்திருக்கும் ஜாதிக ஹெல உறுமய தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன போன்ற கட்சிகள் 13ம் திருத்தச்சட்டத்தினை பகிரங்கமாகவே எதிர்ப்பதும் தமிழ் மக்கள் காலா காலமாக வாழ்ந்து வந்த பிரதேசங்களை பெரும்பாண்மை மக்களின் பிரதேசங்களாக வெளிப்படுத்துவதும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்ற பின்னரே அரசியல் தீர்வுத்திட்டம் என ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளதும் உண்மையிலேயே 13ம் திருத்தச சட்டம் அமுல்படுத்தப்பட்டு நிரந்தரமாகவே இனப்பிரச்சனை ஜனநாயக முறையில் தீர்த்துவைக்கப்படும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் நம்பிக்கை இழந்த நிலையில் அரசுக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தாலும் தேர்தல்களில் தனித்துப்போட்டியிடுவதுதான் தமிழ் இஸ்லாமிய மக்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதோடு 13ம் திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த ஆளும் அரசுக்கு ஜனநாயக ரீதியில் மக்களின் சார்பாக அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்.
.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை நான் குறிப்பிட்டேயாக வேண்டும். 22 பாராளுமண்ற உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்ய முடியாத பல விடயங்களை தனது கட்சியில் போட்டியிட்டு பின்னர் அரசுடன் கூட்டுச் சேர்ந்து இயங்கி வரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் பல அபிவிருத்திப் பணிகளை யாழ் மக்களுக்கு செய்துள்ளார்கள் என்பது மறக்கப்பட முடியாத விடயமேதான். ஆனாலும் அவர்கள் இடத்தில் இதுவரை இருந்துவந்த மிகவும் பலமான மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி என்னும் கொள்கை இத் தேர்தலில் மாற்றம் பெற்றுள்ளது மிகவும் வேதனையான ஒரு விடயமே.

எனது இந்த ஆக்கத்தினை வாசிப்பவர்கள் நான் ஒரு இனவாதியென்றோ அல்லது பெரும்பாண்மை மக்களுக்கு எதிரானவன் என்றோ தயவு செய்து கருதிவிட வேண்டாம். இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் சம உரிமைகளோடும் பூரண அரசியல் உரிமைகளோடும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும்.

அத்தகைய ஒரு சூழல் முழுமையாக மலரவேண்டுமானால் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தபடும் போதுதான் நடைமுறைக்கு சாதகமாக அமையும். அதுவரை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசுடன் ஜனநாயக விளிமியங்களின் கீழ் அரசியல் பேரம்பேச இனங்களுக்கான ஜனநாயகக் கட்சிகள் தனித்துவமாகப் பலம் பெறவேண்டிய தேவை இருக்கத்தான் செய்கின்றது என்ற யதார்த்தமான உண்மையை உணர்ந்து எதிர்வரும் மாநகர சபைத் தேர்தலில் உங்களது வாக்குகளை பயன்படுத்துங்கள்.

நன்றி வணக்கம்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com