Thursday, July 2, 2009

அரசிற்கு அவதூறு ஏற்படுத்தும் சீடீ க்களை எடுத்துச் செல்ல முயன்ற மதபோதகர் கைது.

சட்ட விரோத வீடியோ பதிவுகள் அடங்கிய சீடீ க்களுடன் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட மதகுரு ஒருவரை பயங்கரவாத கண்காணிப்பு பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். மொறட்டுவ பிரதேசத்தை சேர்ந்த சாந்த நிகால் பெர்ணாண்டோ எனப்படும் மேற்படி மதகுரு, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் முன்னணி உறுப்பினரும், தேசிய கிறிஸ்தவ சபையின் நீதி மற்றும் சமாதானக் குழுவின் நிறைவேற்றுச் செயலாளரும் ஆவார்.

இவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடுகின்றது என்ற பொய்த்தகவல்கள் அடங்கிய சீடீ க்களை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டதாகவும், அச் சீடீ க்களை பரிசீலித்தபோது அவற்றில் உள்ள விடயங்கள் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலர், முப்படைத் தளபதிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியனவாக அமைவதாகவும் பிரதம மஜிஸ்திரேட் அவர்களிடம் தெரிவித்தனர்.

மேலும் பாதுகாப்பு அமைச்சின் செயலரின் உத்தரவின் பேரில் மதகுருவை தடுத்து வைத்து மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து அவர், தேசிய பாதுகாப்புச் சம்பந்தமான தகவல்களையும் அரசிற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் அபகீர்த்தியை உண்டு பண்ணும் வகையில் தமிழ்நெட் இணையத்தளத்தில் பிரசுரமாகியிருந்த பல புகைப்படங்களையும் புலிகளுக்கு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விளக்கத்தை செவிமடுத்த மஜிஸ்திரேட் எதிர்வரும் 15ம் திகதி வரை சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு விடயங்களை மன்றிற்கு தெரியப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com