யாழ் நூலகத்திற்கு தீயிட்டது காமினி ஜயவிக்ரம பெரேரா சார்ந்த குழுவினர்.
- நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் இருப்பதாகக் கூறுகிறார் வடமேல் மாகாண முதலமைச்சர்-
யாழ்ப்பாண பொது நூலகத்தை தீயிட்டுக் எரித்தவர்கள் வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா சார்ந்த குழுவினரே எனவும், அதனை நிரூபிப்பதற்கு போதுமான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தற்போதைய வடமேல் மாகாணசபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் அத்துல விஜேசிங்க, யாழ்.பொது நூலகத்திற்கு தீ வைத்தவர்களை நான் நன்றாக அறிவேன். யாழ்ப்பாண பொது நூலகத்திலிருந்து இங்கு
கொண்டு வரப்பட்ட தமிழ் மொழியிலான புத்தகங்கள் பல இன்னமும் ஹெட்டிப்பொல பிரதேசத்தில் உள்ளன. அவற்றை எந்த நேரத்திலும் என்னால் காட்ட முடியும் என்று கூறினார்.
இதேவேளை, ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
"யாழ்ப்பாண பொது நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தவென குருநாகலிலிருந்து புகையிரத மார்க்கமாக ஒரு குழுவினர் சென்றனர். தற்போது அவர்கள் எதுவும் அறியாதவர்கள் போல் உள்ளனர்" என்றார்.
"1983ம் ஆண்டு கறுப்பு ஜூலையை ஏற்படுத்தியவர்கள் யார் என இங்கு நினைவுகூரத் தேவையில்லை" என மீண்டும் முதலமைச்சர் கூறியதை அடுத்து சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
அவ்வேளையில் ஆவேசமாக எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் பிரஸன்ன சமல் செனரத் (ஐ.தே.க.) நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினர் மீது இவ்வாறு அபாண்டமாகப் பழி சுமத்தப்படுவதைத் தம்மால் அனுமதிக்க முடியாது எனவும் முதலமைச்சரின் கூற்று மாகாணசபை விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது எனவும் தெரிவித்ததுடன் முதலமைச்சர் தனது கூற்றை உடன் மீள்பெற வேண்டும் எனவும் கூறினார்.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் 'எனது கூற்றுகள் மாகாணசபை நடைமுறை விதிகளுக்கு முரணானவையல்ல. அவ்வாறு முரண் எனக் கூறப்படுமிடத்து கூற்றை மீளபெற்றுக்கொள்ள முடியும். ஆனால், எனது கூற்றுகளுக்குத் தெளிவான சான்றுகள் உள்ளன. எந்தவேளையிலும் அவற்றைச் சமர்ப்பிக்க முடியும்' எனவும் தெரிவித்தார்.
இவ்வேளையில் மீண்டும் குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் பிரஸன்ன சமல் 'இத்தகைய கருத்துகள், உறுப்பினர் ஒருவர் மீது சேறுபூசி, அகௌரவப்படுத்தும் செயலாகும். தொடர்ந்தும் இவ்வாறான அவதூறுகள் தெரிவிக்க இடமளிக்க முடியாது'எனக் கூறினார்.
1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றினால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புக்களில் ஒரு மிகப்பெரும் வன்முறையாக இது கருதப்படுகின்றது. அத்துடன், இந்தச் சம்பவம் இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது. நூலகம் எரிக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment