Sunday, July 19, 2009

போர் முடிவடைந்தாலும், புலிகள் இன்னமும் முற்றாக அழிக்கப்படவில்லை - ரம்புக்வெல்ல

போர் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும், விடுதலைப் புலிகள் இன்னமும் முழுமையாக அழிக்கப்படவில்லை என அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் கிழக்கில் கெரில்லாத் தாக்குதல்கள் நடத்த ஆரம்பித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் கெஹெலிய ரம்புக்வெல்லவும் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிர்காலத்தில் துப்பாக்கியை அல்ல எறிபொல்லைக் கூட கையில் எடுக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்துரைத்த கெஹெலிய, ' எதிர்காலத்தில் புலி அல்ல பூனையொன்றைக் கூட மீண்டும் எழுவதற்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது. புலிகளுக்கு துப்பாக்கி அல்ல எறிபொல்லைக் கூட கையில் எடுக்க இடமளிக்கப்படமாட்டாது. நாட்டை துப்பாக்கியானால் பிரிக்க முயற்சித்ததைப் போன்றே தற்போது சட்டத்தினால் பிரிக்கப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த விடயமும் பாரிய சிக்கலை ஏற்படுத்தும். இலங்கையில் விடுதலைப் புலிகளை போர் ரீதியாக வெற்றிகொண்டுள்ள போதிலும் விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்படவில்லை.

தற்போது விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர். பத்மநாதன், காட்டில் வாழும் திருடனைப் போல எங்கோ இருந்துகொண்டு செயற்படுகின்றார். சூசை ஒருசமயத்தில் குறிப்பிட்டார் உண்மையான யுத்தம் தரையில் அல்ல கடலிலேயே இருப்பதாக. எனினும், அவை அனைத்தையும் தற்போது வெற்றிகொள்ளப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வெள்ளையர்களும் செயற்பட்டார்கள். உலகில் எந்தவொரு அமைப்பிற்கும் இல்லாத பலத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள். அவர்கள் விமானம் வைத்திருந்தார்கள். எனினும், அந்தக் குறுமாங்கட்டிகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாமல் போனது அவர்களால்.

எனினும், அவர்கள் கொழும்பிற்கு மேலாக பறந்தார்கள். அப்போது நாம் அச்சமடைந்தோம். எமக்கு வெட்கமாகவே இருந்தது. அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனினும். அவர்களினால் பாரியவில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது போனது. கொழும்பில் வட்டமிட்டுச் சென்றார்கள். இதனை உலகிற்கு காண்பித்தார்க்ள. இந்தப் பின்புலத்திலேயே அவர்கள் செயற்பட்டார்கள். எனினும், நான் தற்போது கூறவில்லை அவர்கள் அனைவரும் ஒழிந்துவிட்டார்கள் என்று. அவர்கள் மீள்வதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகவே இருக்கின்றது.' எனக் கூறினார்.

போர் முடிவடைந்தாலும் அதன் மாயை இன்னமும் முடியவில்லை எனவும் தற்போது கரையோரப் பாதுகாப்பு அண்மையில் பலப்படுத்தப்பட்டது மிக முக்கியமான விடயம் எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டார்.

'இலங்கையைச் சுற்றியுள்ள குட்டித் தீவுகளில் சில செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. அவற்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுகுறித்த மேலதிக தகவல்களை தற்போது என்னால் வெளியிட முடியாது. ஏனென்றால் எமக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் இவை பாரதூரமான விடயங்கள். அதனாலேயே கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விசேட சட்டமூலமொன்றைக் கொண்டுவந்து கரையோரப் பாதுகாப்பைப் பலப்படுத்தினோம். இராணுவத்தைப் பலப்படுத்துவதும் இலங்கையின் அபிவிருத்தியின் ஒருபகுதியாகவே கொள்ளவேண்டும்.' என கெஹலிய மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com