ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை. ஆனாலும் யாழ் விமானக்கட்டணம் குறைந்தபாடில்லை. ஜெயலத்.
இலங்கையில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதுடன் இந்நாட்டில் விமானங்களுக்கு இருந்துவந்த ஏவுகணை அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துள்ளபோதிலும் யாழ்பாணத்திற்கான விமான சீட்டுக்களின் விலை குறைந்தபாடில்லை என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனா விமானப் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமை தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாட்டில் விமானங்களுக்கு அச்சுறுத்தல் இருந்த காலத்தில் விமானங்கள் பல விதமான வியூகங்களுடன் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளுடாக பறக்கவேண்டியிருந்தது. அப்போது பறப்பு நேரம் மற்றும் தூரம் அதிகமாகவே காணப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலைமை இல்லை. விமானங்களால் முன்னரைவிட மிகவும் குறைந்த நேரத்தில் எவ்வித சுற்றும் இல்லாமல் நேரடியாக குறுகிய தூரத்துடன் யாழ்பாணத்திற்கு பறக்க முடியுமாக இருக்கின்றபோதிலும் அன்று அறவிடப்பட்ட அதே கட்டணமான 22000 ரூபாவே தொடர்ந்தும் அறவிடப்படுகின்றது.
இலங்கையில் இருந்து ஒன்றரைமணி பறப்புநேரத்துடன் அயல்நாடொன்றின் நகரமான சென்னை செல்வதற்கான விமானக் கட்டணம் 12000 ருபாவாக இருக்கின்றபோது எமது உள்ளநாட்டு நகரம் ஒன்றிற்கான பயணத்திற்கு 22000 ரூபா அறவிடுவது நியாயமற்றது என குறிப்பிட்டிருக்கும் அவர் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment