அரசியல் என்ற பிழையான பாதையில் செல்ல வேண்டியதேவை எனக்கில்லை - சரத் பொன்சேகா
தொழில் ரீதியில் நாட்டுக்கு சேவையாற்றவே தான் விரும்புவதாகவும், அரசியல் என்ற பிழையான பாதையில் செல்லவேண்டிய தேவை தனக்கில்லை எனவும் பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று (15) முற்பகல் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதனையடுத்து அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் உரையாற்றிய சரத் பொன்சேகா, தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு உதவியாக ஒரு தொகுதி இந்திய இராணுவத்தினர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக கூறியுள்ளார்.
பலரும் கூறுவதைப் போன்று இயந்திரங்கள் மூலம் அவற்றை அகற்றமுடியாது. அது இலகுவான காரியமுமல்ல. இதேவேளை, கண்ணிவெடிகளை அகற்றவென இந்திய இராணுவ வீரர்கள் 500பேர் இலங்கை வரவுள்ளனர் என்று பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக தெரிவித்தார். வடக்கு யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளுக்குள் சிக்குண்டு படையினர் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுக்குள் உள்ளாகியுள்ளனர் இவ்வாறான கண்ணிவெடிகளை இரண்டு தொடக்கம் மூன்று மாதங்களில் அகற்றிவிட முடியாது. அவை முழுமையாக அகற்றப்பட்டதன் பின்னரே பொதுமக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்றும் அவர் சொன்னார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,
'பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ள இந்த வேளையில் படையினரின் வெற்றி தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமாயின் நாட்டின் பாதுகாப்பு துரிதப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையிலேயே எனக்கு இந்த பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி என்ற பதவியின் கீழ் 20 பிரதான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் ஜெனரல் பதவிகளை வகிக்கும் 7 அதிகாரிகள் உட்பட முப்படையினர் மற்றும் பொலிஸார் இந்த பொறுப்புக்களைக் முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பொறுப்புக்களின் பிரகாரம் முப்படையினரை உருவாக்குதல், அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களைத் திரட்டுதல், முப்படைக்கும் ஆயுதங்களை வழங்குதல், பாதுகாப்பு படையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல், மற்றும் நாட்டின் பாதுகாப்பை துரிதப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாறான பொறுப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்திக் கையாள்வதுடன் அவை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பதில்கூற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரிக்கு உண்டு.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் நிலையானதொரு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டுமாயின் அப்பிரதேசங்களுக்கேற்ற வகையில் பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாண்டு படையினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த வேண்டும். உதாரணமாக யாழ்ப்பாணம் முழுவதையும் படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு சுமார் 15ஆயிரம் படையினர் இராணுவ நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் அவ்வாறு கைப்பற்றப்பட்ட பிரதேசத்தின் பாதுகாப்பை துரிதப்படுத்துவதற்கு சுமார் 30ஆயிரம் படையினர் தேவைப்பட்டனர்.
அந்தவகையில் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு போன்ற பிரதேசங்களின் பாதுகாப்பை பலப்படுத்த பெருந்தொகையான படையினர் தேவைப்படுவர். வடக்கு கிழக்கின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமாயின் தற்போது இராணுவத்தில் உள்ள 2இலட்சம் ஆளணியினை இரட்டிப்பாக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது நாடு முழுவதிலுமுள்ள முப்படை முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
அத்துடன் இராணுவத்தில் கடமையாற்றிவரும் படையினருக்கு தேவையான வசதி வாய்ப்புக்கள் போன்றன ஏற்படுத்திக்கொடுப்பது மிக முக்கியமாகிறது. அப்போதுதான் இராணுவத்திலிருந்து தப்பிச் செல்பவர்களை எம்மால் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறான எமது படை பலத்தை அதிகரிப்போமாயின் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்படும் எமது படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
உலகில் எந்தவொரு நாட்டு இராணுவத்துக்கும் இல்லாத அனுபவம், திறமை எமக்கு உண்டு. நாட்டில் சமாதானம் உருவாக்கப்பட்ட போதிலும் பாதுகாப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இராணுவம் அவசியமாகும். இது புத்திசாதுரியமாகும். ஆயுதம் மற்றும் ஆளணி என்ற வகையில் முப்படையினருக்கு எல்லாவித திறமையும் உண்டு. அதனால், அந்த திறனை மேன்மேலும் அதிகரிப்பதற்கு தேவையான பயிற்சிகள், ஆயுதங்கள் போன்றன முப்படை, பொலிஸார், பொலிஸ் அதிரடிப்படையினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முப்படையினர் தமது ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள், அபிவிருத்திப் பணிகள் போன்றவற்றில் நாம் வழங்கிய ஒத்துழைப்பு தொடர்ந்தும் மென்மேலும் அதிகரிக்கப்படும். வடக்கின் வசந்தத்தின் போது பாதைகள், பாலம், நீர்நிலைகள், புகையிரத பாதைகள் போன்றவற்றை சீரமைக்கும் பணிகள் உட்பட விவசாயம், மின்சாரம், தகவல் தொடர்புகளை ஏற்படுத்துதல், இடம்பெயர்ந்துள்ள மக்களின் பாதுகாப்பு, அம்மக்களின் அடிப்படைத் தேவைகள் போன்றவற்றின் மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் வடக்கில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளுக்கு சிக்குண்டு படையினர் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தற்போது படையினரால் துரிதமாக்கப்பட்டுள்ளன. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை விடவும் படையினரே அந்த நடவடிக்கையில் பெரும் பங்காற்றி வருகின்றனர். இந்த நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு கால அவகாசம், அதிக கவனம் போன்றன தேவை.
பலர் தரப்பினர் கூறுவதைப் போன்று இரண்டு, மூன்று மாதங்களில் இந்த கண்ணிவெடிகளை அகற்றிவிட முடியாது. இயந்திரங்கள் மூலம் அவற்றை அகற்றுவதாயினும் அது இலகுவான காரியமல்ல. காரணம் வயல்வெளிகள், வாவிகள், சதுப்பு நிலங்கள் போன்றவற்றில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை இந்த இயந்திரங்களால் அகற்றிவிட முடியாது. அதற்கு படையினரின் பங்களிப்பே முக்கியமானது. இந்த கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இந்திய படை வீரர்கள் சுமார் 500 பேர் இலங்கை வரவுள்ளனர். இவற்றை முழுமையாக அகற்றிய பின்னரே வன்னியிலிருந்து வெளியேறிய பொதுமக்கள் மீள் குடியேற்றப்படுவர்.
தமிழ் படையணி
இராணுவத்தில் தமிழ் பிரிகேட் பிரிவொன்றை உருவாக்குவது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவ்வாறானதொரு படையணி ஒருபோதும் உருவாக்கப்படமாட்டாது. கருணா தலைமையில் செயற்பட்ட கிழக்கு ஆயுதக் குழுக்களில் சுமார் 800 பேர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் கிழக்கை மையப்படுத்தி கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இராணுவ ரெஜிமன்ட்டுடன் இணைந்து செயற்படுகின்றனர்.
பாதாள உலக கோஷ்டி
நாட்டில் செயற்பட்டு வரும் பாதாள உலக கோஷ்டியினரை இல்லாதொழிக்க இராணுவத்தினரின் உதவியை நாடவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கு புலனாய்வுப் பிரிவினரின் உதவி கோரப்பட்டுள்ளது. பொலிஸ் நடவடிக்கைகளின் பிரகாரம் அவர்கள் அனைவரும் வெகுவிரைவில் கைது செய்யப்படுவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிப்பதற்கு இரண்டரை வருடங்களே ஆனபோது இந்த பாதாள உலக கோஷ்டியினரை இல்லாதொழிக்க அவ்வளவு காலம் தேவைப்படாது.
200 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள்
புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் என அரசாங்கத்தால் 200 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், அவை தேவைப்படாது என்ற பட்சத்தில் பின்னர் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு அனுமதி கோரப்பட்டுள்ள ஆயுதங்களில் கனரக ஆயுதங்களும் அடங்கின. இறுதிக் கட்டப் போரில் கனரக ஆயுத பாவனைக்கு தடை செய்யப்பட்டதால் அவை நிராகரிப்பதற்கு காரணமாக அமைந்தன.
துரோகிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை
விடுதலைப் புலி இயக்கத்தின் புதிய தலைவராக பல்வேறு வதந்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் கே.பி. என்றழைக்கப்படும் கே. பத்மநாதனுக்கு எதிராக வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் தொடர்பில் நாம் பாதுகாப்பு புலனாய்வுத்துறையினர் ஊடாக தகவல்களை திரட்டியுள்ளோம். அதற்கேற்ற வகையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மட்டுமன்றி நாட்டின் இறைமைக்கு துரோகம் விளைவிக்கக் கூடிய அனைவருக்கும் எதிராகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வெளிநாடுகளின் ஒத்துழைப்பு
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பல்வேறு நாடுகள் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கின. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய நாடுகள், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அரசியல் ரீதியாகவும் இராணுவ மற்றும் புலனாய்வு ரீதியிலும் எமது அரசாங்கத்துக்கும் படையினருக்கும் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கின.
இரட்சணிய படையணி
இலங்கை இராணுவம் இரட்சணிய படையணியாக செயற்படுவதற்கே தகுதியானவர்கள் என்று சில அரசியல்வாதிகள் முட்டாள்தனமான பிரசாரங்களை மேற்கொண்டனர். விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் எமது படையினரின் திறமைகள் அவர்களது கண்களுக்கு இப்பொழுது தெளிவாக புலப்பட்டிருக்கும். இவர்கள் உண்மையில் எதையும் விளங்கிக் கொண்டுதான் பேசுகிறார்களா என்று விளங்கவில்லை.
மனித உரிமை மீறல்
வன்னி மோதலின் போது படையினரின் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்று சர்வதேச சமூகம் கருத்துக்களை வெளியிட்டது. ஆனால், நாம் வன்னியில் சிக்குண்டிருந்த சுமார் 3 இலட்சம் பொதுமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்டுள்ளோம். இது ஒருபோதும் மனித உரிமை மீறலாக கருதப்படாது. பொதுமக்களின் சொத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி பயங்கரவாதிகளை அப்பகுதியிலேயே மறைத்து வைக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை.
சர்வதேசம் கூறும் வகையில் நாம் மக்களை கொன்றிருந்தால் வன்னி முழுதும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதோடு, அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும் வீசப்படும். ஆனால், அது உண்மையில்லை என்பதை அங்கு அடிக்கடி போய்வரும் ஊடகவியலாளர்களுக்கு தெரியும். பொது மக்களில் பலர் கொல்லப்பட்டனர் என்று சர்வதேசத்திற்கு தகவல் வழங்கிய வன்னியில் கடமையாற்றிய வைத்தியர்களே தாம் சொன்னது தவறு என்று ஒத்துக்கொண்டுள்ளனர். இதைவிட சாட்சியம் வேறெது வேண்டும்.
யுத்த நடைமுறை
1950ஆம் ஆண்டு மலேசியாவில் யுத்தத்தின் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. அவர்கள் கல்கட்டாஸ் ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியே பயங்கரவாதத்தை அழித்தனர். இது அன்றைய தொழில்நுட்பத்தில் அமைந்த போர் முறையாகும். ஆனால், இந்த 2009ஆம் ஆண்டில் நாம் நவீன ரக தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட ஆயுத உபகரணங்களை கொண்டு பயங்கரவாதத்தை முற்றாக அழித்துள்ளோம். உலக நாடுகளுக்கு எமது வெற்றி பாரிய படிப்பினையை வழங்கியுள்ளது.
அரசியல் பிரவேசம்
தொழில் ரீதியில் நாட்டுக்கு சேவையாற்றவே நான் விரும்புகின்றேன். அரசியல் பிரவேசம் என்னைப் பொறுத்தவரையில் அசாத்தியமானது. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, ஜெனரல் அலுகம போன்றோரை போன்று பிழையான பாதையில் செல்ல வேண்டிய தேவை எனக்கில்லை.
0 comments :
Post a Comment