மலிந்து கிடக்கும் குற்றச் செயல்கள். (புரட்சிதாசன் அஹமட்)
முப்பத்திரண்டு வருடங்களாக கட்டவிழ்க்கப்பட்ட புலிப்பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட்ட இன்றைய இலங்கை தேசம் இதனை விட ஒரு படி மேலாகவும் தற்போது நாடு பூராகவும் குற்றச்செயல்களைப் புரிந்துவரும் நாசகாரர்களின் பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறுகின்ற துர்ப்பாக்கிய நிலையினை எதிர்நோக்கியுள்ளது. இதற்குப் பின்னணியில் அரசியல்வாதிகளும்இ பாதுகாப்புப்பிரிவில் கடமை புரிபவர்களும் செயற்படுவதால் இதனைக் கட்டுப் படுத்துவதை மிகவும் கடினமான விடயமாகவே நாம் கருதவேண்டியுள்ளது. "வேலியே பயிரை மேயும்" எனும் முதுமொழிக்கு ஒப்ப திரு மேர்வின் சில்வாவின் மேடைப் பேச்சு அமைந்துள்ளது.
எப்போதும் ஒரு நேர்மையான அரசியல்வாதி ஒன்றுக்குமே பயப்படமாட்டான் ஆனால் இன்றைய அரசியலில் உள்ள அனைவரும் கறைபடிந்த கைகளாகத்தான் இருக்கின்றனர். அடாவடித்தனம், அட்டூழியம், கொலைகள் செய்கின்றவர்கள் குற்றச்செயல்கள் புரிபவர்கள் மலிந்து கிடக்கின்றனர். இவ்வாறு இவர்கள் தொடர்வார்களேயானால் எவ்வாறு குற்றச்செயல்களை தடுத்து நிறுத்த முடியும்?
நீதிமன்றினால் குற்றவாளியாகக் கருதப்பட்டவருக்கு நீதி அமைச்சர் பதவி (திரு மிலிந்த மொரகொட) வழங்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தவருக்கு திறை சேரி செயலாளர் (ஜயசுந்தர) பதவி வழங்கப்படவுள்ளது? நாட்டையே குட்டிச்சுவராக்கி சின்னாபின்னமாக்கியவருக்கு மந்திரிப்பதவி (கருணா) இதுபோன்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
அண்மையில் கேகாலையில் ஒரு தமிழ் மாணவன் (வருடம் இரண்டு) எந்த ஒரு பாடசாலையிலும் சேர்க்கப்படமாட்டான் என்றும் இயற்கனவே கல்வி கற்ற பாடசாலையிலும் நையப்புடைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் ஈற்றில் இம்மாணவனின் தகப்பன் நஞ்சருந்தி தற்கொலை செய்தமையினையும் நாம் மறந்து விடலாகாது.
உண்மையான சமாதானமும், அமைதியான நிலையும், ஒற்றுமையான ஒரு இன ஜக்கியமும் ஏற்பட ஒவ்வொருவரினதும் மனம் தூய்மையானதாகவும், மற்றவர்களும் நம்மைப் போன்றவர், நமக்கு இருக்கும் உரிமை மற்றவருக்கும் உண்டு என்று எண்ணுகின்ற நிலையினையும் கொண்டவர்களாக இருப்பின் நிச்சயம் நமது நாடு புது உத்வீகம் அடையும் அத்துடன் மிகவும் விரைவில் தன்னிறைவும் பெறும் என்பது கண்கூடு.
இன்று அதிகமாக நாடு பூராகவும் குற்றச் செயல்களும், தீய நடவடிக்கைகளும் அதிதரித்த வண்ணமே இருக்கின்றது, இதற்கான காத்திரமான தடுப்பு நடவடிக்கைகளை எவ்வித அரசியல் தலையீடோ அல்லது பாதுகாப்புப் பிரிவினரின் தலையீடோ இன்றி கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பயங்கரவாதம் தலைவிரித்தாடிய நிலையில் இருந்ந அமைதி கூட இன்று காணப்படவில்லை. காரணம் சரியான வழியில் திறமையானதும், திடமானதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததேயாகும்.
தற்போது, நாளாந்தம் ஊடகங்களில் 90 வீதமாக குற்றச்செயல்கள் பற்றிய செய்திகளே பிரசுரிக்கப்படுகின்றமை துர் அதிர்ஷ்ட்டவசமாகும். கிழக்கு மாகாணத்தில் அதிலும் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் அதிகமான குற்றச் செயல்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவதற்குக் கொடுக்கப்பட்ட மன்னிப்புக்காலமும் காலாவதியாகிய இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் ஆயுதக்கலாச்சாரம் அரங்கேறியுள்ளது. இந்தச் சட்ட விரோத ஆயுதங்கள் தங்களது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இரவு நேரங்களில் இவ்வாயுதங்களைப் பாவித்து கொள்ளைகள், வல்லுறவுகள் போன்றவற்றைத் தினமும் செய்து வருகின்றனர். இவ்வாறான குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இரவு நேரங்களில் காவல் படையினர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தி சந்தேகத்திற்கிடமானவர்ளை இனங்கண்டு அவர்களுக்குரிய தகுந்த தண்டனைகளை வழங்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் நிந்தவூரிலுள்ள, வௌவாலோடை, முஸ்தபா புரம் எனும் பிரிவுகளில் இரவு வேளைகளிலும் பகல் வேளைகளிலும் இரண்டு இனம் தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்து அங்குள்ள ஆண்கள் உதவியற்ற வீடுகளுக்குச்சென்று பாலியல் சேட்டைகளையும் வல்லுறவு கொள்ளவும் முற்படுகின்றதாகத் தினமும் நாங்கள் செய்திகளைப் பெற்ற வண்ணம் உள்ளோம். இது விடயமாக இயற்கனவே இப்பிரதேச சபைத் தவிசாளருக்குக் கூட பல கடிதங்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. கடைசியாகக் கிடைத்த தகவலின் பிரகாரம் தொடர்ந்து தொடர் தொல்லைகள் கொடுப்பதாகவும், தாங்கள் காவல் நிலையத்தில் தொழில் புரிபவர்கள் என்றும் வெளியில் அம்பலப் படுத்தினால் சுட்டுக் கொன்று விடுவோம் என்றும் பயமுறுத்திச் சென்றுள்ளனர்.
இவர்களது அடாவடித்தனம் தொடர் கதையாக மாறியுள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திக்கு முக்காடுகின்றனர். இது போன்று எமது சமூகத்தில் எத்தனை பேர்கள் திரை மறைவில் பாதிப்புக்குட்பட்டுள்ளனர் என்பதனை எம்மால் வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியும். இவ்வாறான செயல் நடைபெறுவதற்குக் காரணம் சீரற்ற நிர்வாகக்கேடேயாகும்.
எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக நான் சில கோரிக்கைகளை முன் வைக்கின்றேன். இரவு பத்து மணிக்குப் பின்னர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுகின்ற இந்தப் போலிக்கும்பல்களைக் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி தகுந்த தண்டனைகளை பெற்றுக் கொடுக்க சம்மாந்துறைக் காவல் நிலையத்தினர் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
ஒரு நாடு சிறந்த நாகரீகமான முறையில் விளங்க மனித நேயம், தனிமனித உரிமை, சுதந்திரம், ஊடகச்சுதந்திரம், வாழும் உரிமை எல்லாம் பாதுகாக்கப்படல் வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சியடைந்த ஒரு நாடாகக் கருதப்படும் என்பது கண்கூடு.
செய்திகள், தகவல்கள், தெளிவாக வெளியிடப்படும் போது அவற்றிக்கான நம்பகத்தன்மையுடன் அவை வெளியிடப்படுகின்றதா என்பதை எல்லோரும் கவனிக்க வேண்டும். அப்போதுதான் அது ஆரோக்கியமானதாக விளங்கும் என்பது எனது கருத்தாகும்.
எனவே, எமது புண்பட்ட இந்த புனிதமான இலங்கையில் எல்லோரும் ஒற்றுமையுடனும், நல் மனதுடனும், குற்ற உணர்வின்றியும், துன்புறுத்தலின்றியும், ஐக்கியத்தோடும் வாழ ஐக்கியப்படுவோமாக.
0 comments :
Post a Comment