ஐ.நா.வின் அலட்சியமே வன்னியின் பெருமளவான உயிரிழப்பிற்கு காரணம்: - மறுக்கிறார் ஐநா. செயலர் பான் கீ மூன்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது பொதுமக்களுக்குப் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்படலாம் எனத் தெரிந்திருந்தும் ஐ.நா. அதனை அலட்சியம் செய்தது என்ற குற்றச்சாட்டை செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிராகரித்துள்ளார்.
நியூயோர்க்கில் ஷவோல் ஸ்ரீட்| நாளிதழின் ஆசிரியர்கள், செய்தியாளருக்கு அளித்த செவ்வியில், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டு முற்றிலும் பிழையானது. நாங்கள் அலட்சியம் செய்யவில்லை, குறைத்து மதிப்பிடவில்லை, என்னை இதில் குற்றம் சாட்டக்கூடாது. இலங்கையில் துரதிஸ்டவசமாகப் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ள பான் கீ மூன் மேலும் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:
"இலங்கைக்கு நான் விஜயம் மேற்கொண்ட காலத்தை" அடிப்படையாக வைத்து, அனைத்தும் முடிவடைந்த பின்னரே நான் அங்கு சென்றேன் என நீங்கள் வாதிடலாம். நெருக்கடி ஆரம்பமாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நான் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டேன். அனைத்துச் சந்தர்ப்பத்திலும், அனைத்துத் தருணத்திலும் நான் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பேச்சுகளை மேற்கொண்டேன். சில சந்தர்ப்பங்களில் கடுமையான அறிக்கைகளை விடுத்தேன்... வற்புறுத்தினேன்... கண்டித்தேன்' என்று கூறினார்.
இலங்கைக்கான விஜயத்தின்போது இடம்பெயர்ந்த மக்களுள்ள முகாம்களுக்குச் செல்வதற்குத் தடையற்ற, முழுமையான அனுமதி வழங்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்ததாகவும் அது அவ்வாறே நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்பின்னர், இவ்வருட இறுதிக்குள் இந்த மக்களில் 80 வீதமானவர்கள் மீளக் குடியமர்த்தப்படுவர் என இலங்கை ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் உரையாற்றிய பொதுச் செயலர் பான் கீ மூன், 'சர்வதேச சமூகம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் கருத்தை கருத்தில் எடுக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும், முழுமையாகப் பொறுப்புக் கூறவேண்டியதன் அவசியத்தையும் நான் அவருக்குத் தெரிவித்தேன். வெளியே இருந்து திணிக்கப்படுவதற்கு முன்பாக பொறுப்புக் கூறுவதற்காக அர்ப்பணிக்குமாறு நான் கேட்டேன். அவர்கள் அதற்கு இணங்கினார்கள். மோதலில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தாலும் அது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. துரதிஸ்டவசமாகப் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 20 ஆயிரம் பேர் உயிரிழக்கலாம் என்ற தகவல்களை ஐ.நா. அலட்சியப்படுத்தியது, அதனைக் குறைத்து மதிப்பிட்டது எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது முற்றுமுழுதாக உண்மையானதல்ல. நாங்கள் இவ்வாறு செயற்படவில்லை. என்னை இதற்குப் பொறுப்பாளியாக்கக் கூடாது. இது முழுமையாகச் சரியானதல்ல. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. மோசமான சூழ்நிலையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்த சரியான புள்ளி விவரங்களைப் பெற முடியவில்லை'எனவும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment