Wednesday, July 22, 2009

டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை

தமிழனுக்கு தலைகுனிவு - டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை : பாராளுமன்றத்தில் அமளி - டெல்லி விமான நிலையத்தில் சாதாரண மனிதரை போல அப்துல் கலாமிடம் சோதனை நடத்தி உள்ளனர். மிக முக்கிய பிரமுகர்கள் விமான நிலையத்துக்கு செல்லும்போது அவர்களிடம் சோதனை எதுவும் நடத்தமாட்டார்கள். அவர்கள் செல்வதற்கு என்றே தனிப்பாதை உண்டு. இதற்காக விதிமுறைகளும் உள்ளன. ஆனால் இதை மீறி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் விமான ஊழியர்கள் சோதனை நடத்தி உள்ளனர். 3 மாதத்துக்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளியே தெரியவந்துள்ளது.
அப்துல்கலாம் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி டெல்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள நீவர்க் நகருக்கு புறப்பட்டு சென்றார். “கான்டினென்டல் ஏர்லைன்ஸ்” என்ற அமெரிக்க தனியார் விமானத்தில் அவர் பயணம் செய்தார்.

இந்த விமானத்தில் அவர் ஏற சென்றபோது அந்த விமான நிறுவன ஊழியர்கள் சாதாரண பயணிகளுக்கு நடத்தும் அனைத்து சோதனைகளையும் அவருக்கும் நடத்தி உள்ளனர். விமானம் ஏற வந்தபோது அவரை விமானத்துக்கு செல்லும் நடைபாலம் அருகே வலுக்கட்டாயமாக நிறுத்தினார்கள்.

பாதுகாப்பு ஊழியர்களிடம் அனுப்பி அவரை முழுவதுமாக சோதனை செய்ய சொன்னார்கள். அவர்கள் உடல் முழுவதையும் சோதனை செய்தனர். அவரது ஷூவை கழற்ற சொல்லி அதையும் சோதித்தனர். அதன் பிறகுதான் விமானத்தில் ஏற அனுமதித்தனர். இவ்வளவு சோதனை நடந்த போதும் அப்துல்கலாம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அனைத்துக்கும் ஒத்துழைப்பு கொடுத்தார். இது பற்றி அவர் யாரிடமும் சொல்லவும் இல்லை.

அவருக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது அவர்கள் இது பற்றி புகார் கூறலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கு அப்துல்கலாம் இது அந்த விமான நிறுவனத்தின் விதிமுறை என்னிடம் சோதனை நடத்தியதில் தவறு இல்லை என்று கூறிவிட்டாராம்.

இப்போது இந்த விஷயம் எப்படியோ வெளியே வந்துவிட்டது. இதையடுத்து மத்திய அரசு விமான நிலையத்திடம் விளக்கம் கேட்டு உள்ளது.

இது பற்றி அந்த விமான நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி அபர்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எங்கள் விமான நிறுவன விதிமுறைப்படி அனைத்து பயணிகளையும் சோதனையிடுவது வழக்கம். முக்கிய பிரமுகர்கள் என்பதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று எங்கள் நிறுவனத்தில் விதிகள் இல்லை. உலகம் முழுவதும் எங்கள் நிறுவனத்தில் இப்படித்தான் சோதனை நடத்துகிறோம்.

எனவே தான் அப்துல் கலாமிடமும் சோதனை நடத்தினோம். அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து மந்திரி பிரபுல்பட் டேலிடம் கேட்டபோது, “இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி இது போன்ற தவறு நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்காக அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்க இருக்கிறோம்” என்றார்.

விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது “தனியார் மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முக்கிய பிரமுகர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே வழிகாட்டுதல் நெறிமுறைகளை கொடுத்துள்ளோம். ஆனால் அந்த நிறுவனம் மீறி விட்டது” என்றார்.

இந்திய பிரமுகர்கள் வெளி நாடுகளில் அவமானப்படுத்தப்படுவது ஏற்கனவே பலமுறை நடந்து உள்ளது. மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு மாஸ்கோ சென்றபோது அவரிடம் சோதனை நடத்தி அவமதித்தனர்.

ஆனால் இப்போது இந்திய மண்ணிலேயே இந்திய தலைவருக்கு அவமானம் நேர்ந்து இருக்கிறது.

இந்த பிரச்சினை இன்று பாராளுமன்றத்திலும், கிளப்பப்பட்டது. பாரதீய ஜனதா உறுப்பினர்கள் இந்த பிரச்சினை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு மத்திய மந்திரி பிரபு பட்டேல் பதில் அளிக்கும்போது, “இப்போதுதான் இந்த விஷயம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்” என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com