Monday, July 13, 2009

திருத்தல வழிபாடுகளுக்கு தடைபோடச் சென்று மூக்குடைபட்ட புலிகள்.

பிரபாகரன் கும்பல் பூண்டோடு அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புலம் பெயர் புலித்தொழிலாளிகள் பிரபாகரனின் பெயரால் தமிழ் மக்களின் திருத்தல வழிபாடுகள் மீதும், தமிழ் மக்களின் காலாச்சார நிகழ்வுகள் மீதும் நிபந்தனைகளை விதித்து இயல்பு வாழ்வில் மந்தநிலையை உருவாக்க முற்பட்டுள்ளனர்.

ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பல திருத்தலங்களை புலிகள் தொழிலுக்காகவும், தமது பிரச்சாரங்களுக்காகவும் திறந்து வைத்துள்ள அதேநேரத்தில், பிற இயக்கங்களைச் சேர்ந்தோரும் தனி நபர்களும் சில ஆலயங்களை தமிழ் காலச்சார விழுமியங்களைப் பேணுவதற்காக நாடாத்தி வருகின்றனர்.

கடந்த 17ம் திகதி பிரபாகரன் கும்பல் அழிக்கப்பட்டதை தொடர்ந்து, புலம் பெயர்ந்து புலித்தொழில் செய்வோர் பிரபாகரனது இழப்பு துக்கத்தை அனுஸ்டிக்கும் பொருட்டு ஆடம்பர நிகழ்வுகள் எதையும் நாடாத்தவேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்டுள்ளதுடன், ஆலய திருவிழாக்களின் போது ஆலயங்களை ஆடம்பரமாக சோடனை செய்வது மற்றும் மேளம் அடிப்பது போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜேர்மனியில் கம்கோவில் எனப்படும் மிகப்பெரிய காமாட்சி அம்பாள் ஆலயம் ஒன்று தமிழ் மக்களால் நிறுவப்பட்டுள்ளது. அவ்வாலயத்தின் திருவிழா கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. அத்திருவிழா ஆரம்பமாவதற்கு முன்னர் ஆலய நிர்வாகத்தினரை அணுகிய புலிகள், பிரபாகரனின் இழப்பபை ஒட்டி ஆலய திருவிழாவை நாடாத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். அவ்விடயத்தை ஆலய நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ளாதபோது திருவிழாவை ஆடம்பரம் இல்லாமல் மேற்கொள்ளுமாறு கேட்டுள்கொண்டதற்கு ஆலயத்தினர் இணக்கம் தெரிவித்தனர்.

இந்நிலையில் புலிகள் கம்கோயில் திருவிழா இடம்பெறாது எனவும் தேர் இழுக்கப்படாது எனவும் பிரச்சாரம் செய்யலாயினர். இவ்விடயத்தை அறிந்த ஆலய நிர்வாகத்தினர் திருவிழா நடைபெறும் என்ற விடயத்தை மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன் இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கும் தெரிவித்தனர்.

அந்நிலைமைகளை ஆராய்ந்த பொலிஸார் என்றுமில்லாதவாறு திருவிழா நேரத்தின்போது தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை முடக்கி விட்டிருந்ததுடன், விசேட ஏல்லை காவல் படை ஹெலிக் கொப்ரர்களில் சுற்றி, புலிகள் மேற்படி திருவிழாவை குழப்புவதற்கு ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனரா என்பதை அவதானித்ததாக திருவிழாவில் கலந்து கொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சுவிற்சர்லாந்து நாட்டிலும் மேற்படி துக்க தின அனுஸ்டிப்பு விடயம் மக்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இருவாரங்களுக்கு முன்னர் அங்குள்ள முருகன் ஆலயம் ஒன்றின் திருவிழா ஏற்பாட்டுக் கூட்டம் இடம்பெற்றிருக்கின்றது. அதில் திருவிழா உபயகாரார்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவிழா உபயகாரர்களில் ஒருவர் புலிகளால் பரப்பவிடப்பட்டிருக்கின்ற துக்கதின அனுஸ்டானம் தொடர்பாக கூறியுள்ளார். அதற்கு ஆலய நிர்வாகத்தினர் தமது பூரண எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், ஆலய சோடனை மற்றும் மேள, தாள, சப்ர விடயங்கள் யாவும் எவ்வித மாற்றங்களும் இல்லாமல் ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும் எனவும் உபயகாரர் விரும்பினால் வெளிச்சோடனையை தமக்கு விரும்பியவாறு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் திருவிழாவின் ஏனைய உபயகாரர்கள் அனைவரும் வழமைபோல் திருவிழாவை நாடாத்துவது என தீர்மானித்துள்ளனர்.

அதே நேரம் சுவிற்சர்லாந்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சிவன்கோவில் திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவ்வாலயம் புலிகளினால் நிர்வகிக்கப்படுகின்றது. புலிகளின் ஆதரவாளர்களான உபயகாரார்கள் பிரபாகரனுக்காக தாம் தெய்வப் பழியை சுமக்க முடியாது என புலிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து புலிகள் சிவன்கோவில் திருவிழாவை வழமைபோல் நாடாத்தி முடித்துள்ளனர்.

புலிகள் இன்று மக்கள் மீது இவ்வாறான சுமைகளைச் சுமத்துவதற்கான காரணம் தாம் இதுவரைகாலமும் மக்கள் மீது செலுத்திவந்த ஆதிக்கத்தை தொடர்ந்தும் செலுத்த முடியுமா என்பதையும், எதிர்காலத்தில் மக்களை தம்மால் அணிதிரட்ட முடியுமா என்பதையும் பரிசோதிக்கவே எனக் கொள்ளலாம்.

ஆனால் நிலைமைகள் தற்போது மிகவும் மாற்றமடைந்து வருகின்றது. புலிகள் புலம்பெயர் தேசத்திலே தமது ஆக்கிரமிப்பு இல்லாத அல்லது தமது கட்டளைக்கு கட்டுப்படாக சகல நிகழ்வுகளையும் நிராகரிக்கும் படி மக்களை கேட்டிருந்தனர். அந்நிகழ்வுகளில் கலந்து கொள்வது தேசத்துரோகமாக புலிகளால் அர்த்தப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் மக்கள் தாமாகவே முன்வந்து கலந்து கொள்கின்றனர். இதன் மூலம் புலிகளின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ள மக்கள் தாயாராக இல்லை என்பதை உணத்துவதே அவர்களின் நோக்கமாகவுள்ளது.

மக்கள் இவ்வாறு புலிகளால் தடைவிதிக்கப்பட்டிருந்த நிகழ்வுகளை நிறைவேற்றுவது அல்லது அந்நிகழ்வுகளில் தாமும் பங்கு கொள்வதானது புலிகளுடன் நேரடியாக மோதாவிட்டாலும் உளவியல் ரீதியாக புலிகளின் எந்தவிதமான கட்டளைகளுக்கும் மக்களாகிய நாம் எதிர்வரும் காலங்களில் கட்டுப்படப்போவதில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

பிரபாகரன் கும்பல் மக்களுக்கு செய்த துரோகங்களுக்கு இறைவனால் தகுந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கருதும் மக்கள் மத்தியில், புலம்பெயர் புலித் தொழிலாளர்கள் இறைசெயற்பாடுகளில் இன்றும் தலையிடுவதானது தமக்கும் மக்களுக்கும் மேலும் இறைபழியை ஏற்படுத்திக் கொள்ளவே எனலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com