பாதாள உலக குழுக்களை துடைத்தெறியவும்.- ஜனாதிபதி
இலங்கையின் சகல பாகங்களிலும் செயற்படுகின்ற பாதாள உலக குழுக்களை இல்லாது ஓழிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். கையாள முடியாத அதிபயங்கர பாதாளக்குழுக்களை இராணுவத்தின் உதவியுடன் கையாளுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ள ஜனாதிபதி, பாதாளக்குழுக்களைத் துடைத்தெறியும் பாதுகாப்பு படையினரின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகளை தான் சகித்துக்கொள்ள மாட்டேன் என மிகவும் காரசாரமாக கூறியதாக பொலிஸ் உயர் மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு பாதளாக் குழு மற்றும் போதைப் பொருள் அழிப்பு விடயங்களை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்ற நிலையில், பல கிறிமினல் பேர்வழிகள் ஒழிந்துள்ளதாகவும், பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இப்பாதாளக்குழுக்கள் செல்வந்தர்ளிடமும், வியாபாரிகளிடமும் தொடர்ச்சியாக கப்பம் பெறுவதுடன், கூலிக்காக கொலைகளையும் புரிந்து வருகின்றனர். அவ்வாறு அமைச்சர் அலவி மௌலானாவின் நெருங்கிய வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் பெற முயன்ற மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த பாதாள உலக தலைவர் ஒருவர் அண்மையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இச் சமுகவிரோதிகளை ஒழிப்பதற்கு மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதுடன், இக்குழுக்களுடன் தொடர்புகளை வைத்துள்ள அரசியல்வாதிகள் தம்மை இவர்களிடம் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment