துறைநீலாவணைக் கிராமமும் அரசியல்வாதிகளின் அசமந்த போக்கும். -துறைநீலாவணையான் -
மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு திசையின் எல்லைக்கிராமாக துறைநீலாவணைக் கிராமம் காணப்படுகிறது. இங்கு 3500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. இக்கிராம மக்கள் பல அடிப்படை வசதிகளை இழந்தவர்களாக உள்ளபோதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மக்களின் நலனிற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராமையையிட்டு மக்கள் வேதனை கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இருந்து இக்கிராமத்திற்குச் செல்வதற்கு ஒரு பிரதான வீதியும், கிராமத்தில் பல சிறு வீதிகளும் காணப்படுகின்றன. ஆனால் 1977ம் ஆண்டு புனரமைக்கப்பட்ட இவ்வீதிகள் இன்று வரைக்கும் புனரமைக்கப்படவில்லை. மக்கள் பாவிக்கமுடியாத வகையில் குன்றும் குழியுமாக கிழக்கு, மேற்கு வீதிகள் காணப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பாக கிழக்குமாகாண ஆளுனர், மண்முனை தெற்கு எருவில் பிரதேச செயலாளர், மண்முனை தெற்கு எருவில் பிரதேச சபை தவிசாளர் போன்றோருக்கு எழுத்து மூலம் பிரதேச மக்கள் தெரியப்படுத்தியபோதும் சம்பந்தப்பட்டவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மேலும் களப்புக்களாலும், குளங்களாலும் சூழப்பட்ட இக்கிராமம் மட்டக்களப்பில் தனியானதோர் நிலஅமைப்பைக் கொண்டுள்ளமையால் அம்மக்கள் தனித்தே வாழ்கின்றபோதும், தங்களது கலாசார நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஒரு பொது மண்டபம் அற்றவர்களாக காணப்படுகின்றனர். இலங்கையில் தொடர் நிலங்களாக காணப்படுகின்ற பெரும்பாலான கிராமங்கள் தமக்கென பொது நிகழ்வு மண்டபங்களை கொண்டுள்ளபோதும் தனித்து வாழும் இம்மக்கள் அப்பாக்கியத்தை பெற்றுக்கொள்ளாதது பெரும் துன்பகரமானதாகும்.
அத்துடன் சிறார்களின் வளர்ச்சிக்கும் சிந்தனைக்கும் உடலாரோக்கியத்திற்கும் மிகவும் இன்றியமையாததும், சிறார்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவும் கருதப்படுகின்ற சிறுவர் மைதானம் அல்லது சிறிய பூங்கா இக்கிராமத்துச் சிறுவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
காலாகாலமாக இடம்பெற்று வரும் தேர்தல்களில் வாக்கு கேட்டுவரும் அரசியல்வாதிகள் மேற்படி விடயங்களை நிவர்த்தி செய்யப்போவதாகவே இக்கிராம மக்களிடம் வாக்குக் கேட்பர். இவர்களின் பொய்பிரச்சாரங்களுக்கு நம்பி வாக்களித்த மக்களால் குறிப்பிட்ட அரசியல்வாதிகளை அடுத்த தேர்தலின்போதே காணமுடிகின்றது.
இவ்வாறு அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்வரும் தேர்தல்காலங்களில் தமது கிராமத்தினுள் எந்த ஓர் அரசியல்வாதியினதும் வாகனங்கள் உட்புகாதவாறு வீதித்தடை அமைக்கவுள்ளதாக அங்குள்ள இளைஞர் வட்டத்தில் இருந்து தெரியவருகின்றது.
குறிப்பாக கொழும்பில் இருந்து அரசியல் செய்து கொண்டு, 2 மாதங்களுக்கு ஒருதடவை மட்டக்களப்பு பிரதேசத்திற்கு வந்து இங்குள்ள மக்களின் அபிவிருத்திகளை மேற்கொள்வதாக கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தயவு செய்து இவ்விடயத்தை கருத்தில் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
அத்துடன் இக்கிராமத்தில் இருந்த பலர் சிறந்த கல்விமான்களாக இக்கிராமத்தை விட்டு வெளியேறியிருக்கின்றனர். தம்மை வளர்த்துவிட்ட அல்லது தாம் வளர்ந்த கிராம நலனில் அக்கறைகொண்டு தாம் சார்ந்திருக்கும் துறைகள் அல்லது வளங்களை கிராம முன்னேற்றத்திற்காக பயன்படுத்த முன்வரவேண்டும்.
0 comments :
Post a Comment