கண்ணிவெடிகளை அகற்ற இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 500 பேர் விரைவில் இலங்கை வருவர் - சரத் பொன்சேகா
போர் முடிவடைந்துள்ளதை அடுத்து படையினர் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணி இலகுவானதொன்றல்ல. இதற்கு நீண்டகாலம் எடுக்கும். இதில் எமக்கு உதவ இந்தியப் படையினர் கண்ணிவெடி அகற்றும் பிரிவின் 500 பேர் இலங்கை வரவுள்ளனர் என பாதுகாப்புச் சபையின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
புதிய பதவியேற்பு நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தியப் படையைச் சேர்ந்தவர்கள் எப்போது வருவார்கள் என்பதை உறுதியாக தெரிவிக்காத சரத் பொன்சேக்கா, கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு இந்தியப் படையினரின் பங்களிப்பு அவசியமானவையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அரச சார்பற்ற அமைப்புக்கள் செய்ததைவிட அரச படையினர் பத்து மடங்கு அதிகமாகச் செய்திருப்பதாகத் தெரிவித்த சரத் பொன்சேகா, தற்போது போர் முடிவுக்கு வந்துவிட்டதால் படையில் உள்ள அனைத்து கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் கருத்துதெரிவித்த சரத் பொன்சேகா, 'கண்ணிவெடிகளை அகற்றுவது இலகுவான விடயமல்ல. சேற்று நீர், சதுப்பு நிலங்கள், வயல்வெளி போன்ற இடங்களில் இதற்கான கருவிகளைப் பயன்படுத்த முடியாது. எனவே யார் அவசரப்பட்டாலும், அவர்களின் அவசரத்துக்கு ஏற்ப இதனைச் செய்ய முடியாது. இதற்கு எமக்கு கால அவகாசம் தேவை' எனக் குறிப்பிட்டார்.
'இந்தியப் படையின் 500 பேரைக் கொண்ட கண்ணிவெடிகளை அகற்றும் அணி ஒன்று விரைவில் இங்கு வரும் என எதிர்பார்க்கின்றோம், எப்படி இருந்தாலும் ஓரிரு நாட்களில் இதனைச் செய்துவிட முடியாது. கால வரையறையையும் சொல்ல முடியாது. ஆனால், கூடிய விரைவில் இந்தப் பணிகளைச் செய்துமுடிக்க எதிர்பார்க்கின்றோம்' எனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்தியப் படையினர் இலங்கை வரவுள்ளனர் என்ற அறிவிப்பு வெளியானது முதலே ஜே.வி.பி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றது.
அத்துடன், விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட இலங்கைப் படையினருக்கு ஏன் கண்ணிவெடிகளை அகற்ற முடியாது எனவும், இதற்காக இந்தியப் படையினரின் பிரசன்னம் அவசியமற்றது எனவும் ஜே.வி.பி. எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றது.
0 comments :
Post a Comment