Thursday, June 11, 2009

பிரபாகரன் கொல்லப்பட முன்னர் சித்திரவதை செய்யப்பட்டார்: மனித உரிமைகள் அமைப்பொன்று அறிக்கை

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக முன்னணி மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு முன்னாலேயே பிரபாகரன் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக உயர்மட்ட இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த அமைப்பு நேற்றுப் புதன்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இராணுவத்தினரின் 53வது படையணித் தலைமையகத்திலேயே பிரபாகரன் சித்திரவதைப்படுத்தப்பட்டதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

“பிரபாகரனின் 12 வயதான இரண்டாவது மகன் பாலச்சந்திரன் கைதுசெய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டதாகப் பல இராணுவ வட்டாரங்கள் கூறியிருந்தன. பிரபாகரன் முன்னிலையிலேயே அவருடைய மகன் கொல்லப்பட்டுள்ளார் என்பதை எமது செய்தி மூலங்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளன” என்று மனித உரிமைகளுக்கான ஆசிரியர்கள் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“இராணுவ உயரதிகாரிகள் ஒருவர் மீது பொய் கூறினாலும், எமக்குக் கிடைத்த தகவல்கள் சரியானவை. பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப் புலி உறுப்பினர்களும் படுகொலைசெய்யப்பட்டனர் என எமது மூலங்கள் கூறுகின்றன” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் குழு 48 பக்க அறிக்கையொன்றையும் தயாரித்து வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் முன்னர் பாதுகாப்பு வலயமாகவிருந்த நந்திக்கடல் பகுதியில் கடந்த மே 18ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார் என அரசாங்கம் அறிவித்திருந்தது. மீட்கப்பட்ட பிரபாகரனின் சடலம் எனக் கூறி சடலமொன்றையும் இராணுவத்தினர் காண்பித்திருந்தனர்.

மீட்கப்பட்ட சடலம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடையதுதான் என புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், தேசிய நல்லிணக்க அமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் உறுதிப்படுத்தியிருந்தார்.

“விடுதலைப் புலிகளின் தலைவர் கைதுசெய்யப்பட்டார் அல்லது சரணடைந்தார் எனத் தகவல்கள் கசிந்திருந்தபோதும், அதனை உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மறுத்திருந்தனர். இதனால் இந்த விடயத்தில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டுமென்ற நிலை தோன்றியுள்ளது” என மனித உரிமைகளுக்கான ஆசிரியர்கள் அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Thanks INLLANKA

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com