நிவாரண கப்பலை இலங்கை அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம்
முதல்- அமைச்சர் கருணாநிதி மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
இலங்கையில் உணவு கிடைக்காமல் தவித்த தமிழர்களுக்கு உதவ ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அனுப்பி வைத்த உதவிப் பொருட்கள் கொண்ட கேப்டன் அலி கப்பலை கடற்படை திருப்பி விட்டது. அந்த கப்பலில் 884 டன் உணவு, மருந்து மற்றும் உதவிப்பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
உலகில் புலம் பெயர்ந்து தவிப்பவர்களுக்கு உதவ, மனிதாபிமான அடிப்படையில் தேவையான பொருட்களை சர்வதேச சமூகம் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். எனவே இந்த நேரத்தில் இது தொடர்பாக இந்திய அரசு தலையிடுவது பொருத்தமானதாக, சரியான நேரத்தில் உதவுவதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். கேப்டன் அலி கப்பலில் உள்ள உதவிப் பொருட்களை இலங்கையில் இறக்க அந்த நாட்டை இந்தியா சம்மதிக்க வைக்க வேண்டும்.
மேலும் செஞ்சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகள் கண்காணிப்பில் அந்த உதவிப்பொருட்களை ஈழத்தமிழர்களுக்கு கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும். மனிதாபினமான அடிப்படையில் இந்த உதவியை இந்தியா செய்யும் என்று நான் நம்புகிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு, சரியான நடவடிக்கை எடுத்தால் நான் நன்றி உடையவனாக இருப்பேன். வணங்கா மண் கப்பல் உதவிப்பொருட்கள் தொடர்பாக உங்களிடம் பேச, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நான் அனுப்பி வைக்கிறேன். அவர் உங்களிடம் எல்லா தகவல்களையும் விரிவாக தெரிவிப்பார் என்று கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment