வணங்காமண் கப்பலை அனுமதிப்பது என்ற கதைக்கே இடமில்லை: அரசாங்கம்
வணங்காமண் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதிப்பது என்ற கேள்விக்கே இடமில்லையெனக் கூறிய இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ் அதிகாரி ஒருவர், இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் பிரசார நோக்கம் கொண்டதெனவும் தெரிவித்தார்.
வணங்காமண் கப்பலிலிருக்கும் நிவாரணப் பொருள்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளின் உதவியுடன் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கிடைக்க வழிசெய்யவேண்டுமென தமிழக முதல்வர் மு.கருணாநிதி, கடித மூலம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவிடம் கோரியிருந்தார். இந்த நிலையில், இதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்திருந்தார்.
இதேவேளை, இந்த நிவாரணப் பொருள்கள் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் சேகரிக்கப்பட்டதென்பதுடன், பிரசார நோக்கங்களுக்காகவே இந்தப் பொருள்கள் சேகரிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசாங்கம் கருதுகிறது.
புலம்பெயர்வாழ் தமிழர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை ஏற்றிய வணங்காமண் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளதெனக் கூறி மீண்டும் திருப்பியனுப்பப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment