தீர்வை மிக அண்மித்திருந்தோம்: சொல்ஹெய்ம்
இலங்கை இனப்பிரச்சினையில் சமாதானத்தை மிகவும் அண்மித்துக் கொண்டிருந்தபோதே விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் மோதல்கள் ஆரம்பித்ததாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறினார்.
“சமஷ்டி அடிப்படையில் தீர்வொன்றைக் காண்பதற்கு விடுதலைப் புலிகளையும், இலங்கை அரசாங்கத்தையும் இணங்கவைக்க நாம் தவறிவிட்டோம். இந்தியா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் சமஷ்டிமுறை பின்பற்றப்படுகிறது” என்று குறிப்பிட்ட எரிக்சொல்ஹெய்ம், “ஆரம்பத்தில் சமஷ்டிமுறையில் தீர்வுகாண இணக்கம் காணப்பட்டது. இலங்கையிலுள்ள அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆனால், பின்னர் அதனை ஏற்றுக்கொள்ளப் பிரபாகரனோ அல்லது இலங்கை அரசாங்கமோ தயாராகவிருக்கவில்லை” என பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
குறைந்தது 10 தடவைகள் பிரபாகரனைத் தான் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட எரிக் சொல்ஹெய்ம், போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தாக்குதல்கள் நிறுத்தப்படும் எனப் பிரபாகரன் வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்பட்டபோதும், பின்னர் அவரால் அதனைக் கடைப்பிடிக்க முடியாது போனதாகக் கூறினார்.
மோதல்கள் இறுதிக்கட்டத்திலிருந்தபோது ஆயுதங்களைக் கைவிட்டு வெள்ளைக் கொடிகளுடன் அரசாங்கப் படைகளிடம் சரணடைவதே உயிர் தப்புவதற்கான ஒரேயொரு வழியெனத் தாம் விடுதலைப் புலிகளுக்குக் கூறியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தற்பொழுது மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளன. தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டிய காலம் வந்துள்ளது. அனைத்து சமூகங்களினதும் எதிர்காலம் பற்றிச் சிந்தித்துத் தீர்வொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைக்கவேண்டும். தமிழ் மக்கள் தமது வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி உதவிக்கரம் நீட்டவேண்டும்” என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.
அதேநேரம், இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும், மனிதநேய அமைப்புக்களும் தடையின்றி சென்று வருவதற்கான அனுமதி குறித்து இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து செயற்பட்டுவருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தனிநாடு கோரிப் போராடிவந்த விடுதலைப் புலிகள் அமைப்பு 2001ஆம் ஆண்டு முதன் முறையாக ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பும் போர்நிறுத்தமொன்றுக்குச் செல்ல இணங்கியதுடன், 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி நோர்வேயின் அனுசரணையுடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் போர்நிறுத்த உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டனர்.
போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கிலிருந்த மக்கள் சுமுகமான வாழ்க்கையை அமைக்கத் தொடங்கினர். வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் பகுதிகள், அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகள் என வரைறுக்கப்பட்டன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் செல்வது தடுக்கப்பட்ட அதேநேரம், விடுதலைப் புலிகளும் ஏனைய பகுதிகளுக்குச் சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட இணக்கம் காணப்பட்டது.
போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி சாதாரண நிலையொன்று ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சமாதானத்துக்கான காலம் கனிந்தது. போர்நிறுத்த உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் 2002ஆம் ஆண்டே ஆரம்பமாகின.
முதல்ச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தாய்லாந்தில் நடைபெற்றன. 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நோர்வேயில் நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட உள்ளக சுயநிர்ணய உரிமையொன்றுக்கு இரண்டு தரப்பும் இணங்கியிருந்தன. அதன் பின்னர் நடைபெற்ற ஏனைய மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் உள்ளகசுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்டே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
எனினும், ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து ஒருதலைப் பட்சமாக விலகிக்கொண்டனர். அதன் பின்னர் தென்பகுதி அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டு 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.
அவரின் ஆட்சிக் காலத்திலும் நோர்வேயின் அனுசரணையுடன் 2006ஆம் ஆண்டு இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளில் உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றி அதிகளவில் பேசப்படாதநிலையில், விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்தே 2006ஆம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையிலான சமாதான முயற்சிகள் முடிவுக்கு வந்து மோதல்கள் ஆரம்பித்தன.
வீடியோ பகுதி 1
வீடியோ பகுதி 2
0 comments :
Post a Comment