இலங்கை உயர்மட்டக் குழு புதுடில்லி விஜயம்
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கை உயர்மட்டத் தலைவர்கள், மத்திய அரசாங்கத்தின் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தெரியவருகிறது.
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இன்று புதன்கிழமை புதுடில்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடில்லிசெல்லும் இலங்கை உயர்மட்டக் குழுவினரிடம் இலங்கையில் அதிகாரப் பகிர்வைத் துரிதப்படுத்துமாறு இந்தியத் தலைவர்கள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை உயர்மட்டக் குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளிவிவகாரச் செயலாளர் சிவ் சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைச் சந்திக்கவுள்ளனர்.
இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கும், புனர்நிர்மாணப் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கும் இந்தியா, இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு இலங்கையை வலியுறுத்தும் எனக் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தியாவின் யுத்தத்தையே தான் முன்னெடுத்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்த நிலையில், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வுமூலமான தீர்வொன்றை முன்வைக்கவேண்டுமென இந்தியாவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
0 comments :
Post a Comment