Sunday, June 14, 2009

எங்களை கௌரவமாக நடத்தினர்: புலிகளிடம் கைதியாக இருந்த இலங்கை கடற்படை வீரர்

போர்க் கைதியாக பிடிபட்ட எங்களை விடுதலைப் புலிகள் கௌரவமாக நடத்தினர் என்று இலங்கை கடற்படை வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2006 நவம்பர் மாதம் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 6 பேரை விடுதலைப் புலிகள் போர்க் கைதியாக பிடித்துச் சென்றனர். இதில், சமிந்த குமார ஹெவேஜ் என்பவர் சிங்கள மொழி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

எங்களை முதலில் கிளிநொச்சியில் 2 ஆண்டுகளாக தங்க வைத்திருந்தனர். பின்னர், அங்கிருந்து வன்னி பகுதிக்கு அழைத்து வந்தனர். மே 17ம் தேதி நடைபெற்ற இறுதித் தாக்குதலின்போது புலிகள் பலர் அந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் தப்பினோம்.

கடைசி நாட்களில் புலிகள் தங்களிடமுள்ள கனரக ஆயுதங்களுக்கு தேவையான போதிய வெடிபொருட்கள் கிடைக்காமல் பற்றாக்குறையால் தவித்தனர்.

புலிகளின் தலைமை சரணடைவதற்காக எங்களை இலங்கை ராணுவத்திடம் தூது அனுமப்பியதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது. நாங்கள் தப்பி வரும் முன்னர் புலிகளின் எந்தத் தலைவர்களையும் சந்திக்கவும் இல்லை. ராணுவத்திடம் தூது செல்லவும் இல்லை.

விடுதலைப் புலிகள் பிடித்து வைத்திருந்த போர்க் கைதிகள் அனைவரது பெயரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பதிவு செய்யப்பட்டிருந்தன. எங்களை புலிகள் மோசமாக நடத்தவில்லை. கௌரவமாகவே நடத்தினர்.

போரின் கடைசி நாட்களில் எங்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்க விரும்பினர். ஆனால், போர் நடைபெறும் பகுதிக்குள் செஞ்சிலுவைச் சங்கத்தினர் வர தடை விதிக்கப்பட்டிருந்ததால் அந்த திட்டம் நிறைவேறவில்லை.

இவ்வாறு இலங்கை கடற்படை வீரர் சமிந்த குமார ஹெவேஜ் கூறியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com