புலிச் சந்தேகநபர்களுக்குப் பொதுமன்னிப்பு: அரசாங்கம் நடவடிக்கை
விடுதலைப் புலி சந்தேகநபர்களுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான சட்ட வரையறைகளை அரசாங்க சட்டத் திணைக்களம் தயாரித்துவருகிறது.
இதற்கமைய விடுதலைப் புலிகளின் பெரும்பாலான உயர்மட்ட உறுப்பினர்கள் மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்படும் பட்சத்தில் அவர் இலங்கையின் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“இப்பொது நல்லிணக்கமொன்றை ஏற்படுத்தவேண்டிய சூழ்நிலையே காணப்படுகிறது. போதுமானளவு ஆதாரங்களின்றி பொதுமக்கள் மீது குற்றஞ்சுமத்துவது பிழையானது. எனினும், விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் மோசமான குற்றச்சாட்டில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டுப்படும் பட்சத்தில் அவருக்கு சட்டரீதியாகத் தண்டனை வழங்கப்படும்” என அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய சுமார் 10,000 பேர் மோதல்களின் பின்னர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் அரசாங்கத்தால் வவுனியாவில் தனியான முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொது மன்னிப்பு வழங்கும் அரசாங்கத்தின் வரையறைகள் தயாரிக்கப்பட்டதும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டுவிடுவார்கள் என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அதேநேரம், மோசமான குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டார்கள் எனக் குற்றஞ்சுமத்தப்படுபவர்கள் தொடர்பான அறிக்கைகளைப் பொலிஸார் சட்டமா அதிபருக்குச் சமர்ப்பிப்பார்கள் எனவும், அதன் பின்னர் அவர்கள் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுமெனவும் அவர் கூறினார்.
இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களை விசாரிப்பதற்கென எதிர்வரும் தினங்களில் விசேட நீதிமன்றமொன்று அமைக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவலின்படி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் 135 தடுப்பு முகாம்களில் 6,700ற்கும் அதிமானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment