இந்தியா சென்றுள்ள இலங்கை உயர் மட்டக் குழுவினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஸ்ணா உட்பட்ட இந்திய உயர்மட்டக்குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை சென்றடைவதற்கு ஏற்பாடாகியுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் இருதருப்பினரும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 13ம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தி மாகாணங்களுக்கான அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதாகவும் இலங்கை அரசு உறுதி தெரிவித்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின் எஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இலங்கையின் வட பகுதியில் புலம் பெயர்ந்த மக்களுக்காக `கேப்டன் அலி' கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்டு வினியோகிக்குமாறு இந்தியா தெரிவித்த யோசனையை இலங்கை அரசின் குழுவினர் ஏற்றுக் கொண்டனர். இந்த நிவாரண பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்.
மேலும், இலங்கையில் புலம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான புணரமைப்பு பணிகள் குறித்து இலங்கை குழுவினருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அடுத்த 6 மாத காலத்தில் அனைத்து அகதி முகாம்களும் அகற்றப்பட்டு, அங்கிருக்கும் மக்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இலங்கை குழுவினர் தெரிவித்தனர். இதற்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும்.
மாகாணங்களுக்கு குறிப்பிட்ட அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க இலங்கை அரசு தயாராக இருப்பதாகவும் அவர்கள் உறுதி அளித்தார்கள். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியாவின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இலங்கையின் அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு இந்தியா-இலங்கை அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசின் தூதர்களிடம் வலியுறுத்தப்பட்டது. கச்சத்தீவில் எந்தவித கட்டுமான பணியையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் இலங்கை தெளிவுபடுத்தி இருக்கிறது.
இவ்வாறு வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.
இலங்கை அதிபரின் அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்சே கூறியதாவது:-
இந்திய வெளியுறவு மந்திரியுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்படுகின்றன. அவர்கள் விரைவில் தங்கள் சொந்த இடங்களுக்கு சென்று வசிக்க தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு உள்ளது.
கண்ணி வெடிகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த பணி முடிவடைந்ததும் முகாம்களில் இருப்பவர்கள் அவரவர் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது 6 மாதங்களில் நிறைவு பெறும்.
இவ்வாறு பசில் ராஜபக்சே கூறினார்.
வணங்காமண் கப்பலில் வந்துள்ள நிவாரண பொருட்களை இறக்கி வினியோகிக்க சம்மதித்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு, ``கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு உள்ளோம்'' என்று பதில் அளித்தார்.
No comments:
Post a Comment