இடைத்தங்கல் முகாமிலிருந்து தப்பியோடிய இரு பெண்கள் விமான நிலையத்தில் கைது.
வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறி வெளிநாடு செல்ல முற்பட்ட இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத்தங்கல் முகாம்களில் உள்ள வசதி படைத்தவர்கள் வவுனியாவில் உள்ள தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு பணம்கொடுத்து அவர்களின் உதவியுடன் அம்முகாம்களில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள மேற்படி இரு யுவதிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள் முகாம்களில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறுவதற்கு பணத்திற்காக உதவிய நபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அதிகாரி ஒருவர் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள புலிகள் உட்பட சகல இயக்கங்களையும் சேர்ந்தோர் வவுனியா முகாம்களில் உள்ளோரை சட்டவிரோதமாக வெளியே கொண்டுவரும் விடயத்தை தமது வியாபாரமாக்கிக் கொண்டுள்ளனர். புலம்பெயர் புலிகள் தாம் விலைக்கு வாங்கியிருந்த பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் மூலமும் மாற்று இயக்கத்தினர் தமது அரசியல் செல்வாக்கு மூலமும் இச்செயலை செய்து வருகின்றனர்.
இச் சட்டவிரோத நடவடிக்கையானது முகாம்களில் இருக்க கூடிய மக்கள் மீதான பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரிக்க வைத்துள்ளதுடன் அங்குள்ள மக்களின் மனநிலையையும் பாதித்துள்ளது. பண வசதி படைத்தவர்கள் வெளியேறும் போது ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் முகாம்களில் இருக்க வேண்டிய நிலையை இச்செயல் உருவாக்கியுள்ளது.
0 comments :
Post a Comment