Saturday, June 27, 2009

கூட்டமைப்பின் நிலைப்பாடு நிரந்தரமானதா?

புலிகளின் தோல்வியுடன் இலங்கையில் தனிநாட்டுக் கோரிக்கை செத்துவிட்டது. வெளிநாடுகளில் அதற்குப் புத்துயிர் கொடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் சிலர் நாடுகடந்த தற்காலிக அரசு என்ற பெயரில் அமைப்பதற்கு முயற்சிக்கும் அரசாங்கம் இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவரும் என்று நினைப்பது இலங்கையில் தனிநாடு அமையும் என்று மக்கள் மத்தியில் வளர்க்கப்பட்ட கற்பனையிலும் பார்க்க மோசமான கற்பனையாக இருக்கும்.

இலங்கையில் தனிநாட்டுக்கான போராட்டம் இங்குள்ள தமிழ் மக்களைப் படுகுழியில் தள்ளுவதில் முடிந்திருக்கின்றது. இப்போது வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தனிநாட்டு முஸ்தீபு அங்குள்ள இலங்கைத் தமிழருக்கு என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி இன்று பலரிடம் எழுகின்றது.

வெளிநாடுகளில் இயங்கும் நாடுகடந்த தற்காலிக அரசு என்பது இலங்கையை இரு கூறாகப் பிளவுபடுத்தும் இலக்கைக்கொண்ட அமைப்பு. இது ஸ்தாபன ரீதியாகத் தமது மண்ணில் செயற்படுவதை உலக நாடுகள் எந்தளவுக்கு அனுமதிக்கப் போகின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நாடுகடந்த அரசுக்காக உலக நாடுகள் இலங்கையைப் பகைத்துக்கொள்ளப் போவதில்லை.

வெளிநாடுகளில் புலிகள் இயக்கத்துக்கு ‘எக்கச்சக்கமான’ சொத்துகள் இருக்கின்றன. வெளிநாட்டு வங்கிகளிலுள்ள பணத்தையும் சேர்த்துப் பார்த்தால் ஆயிரம் கோடிக்கு மேல் தேறும். இவ்வளவு சொத்தும் சில தனிநபர்களிடம் சிக்கிப் போகாமலிருப்பதற்கான ஏற்பாடு தான் நாடுகடந்த தற்காலிக அரசு என்று சிலர் சொல்கின்றார்கள். அது எவ்வாறாயினும், இது தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காத முயற்சி.

இந்த முயச்சிக்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றார்கள். நாடுகடந்த தனியரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களும் கூட்டமைப்புத் தலைவர்களும் கடந்த மூன்று வருடங்களாக ஒரே பாதையில் பயணித்தவர்கள். அதாவது தனிநாடு அமைக்கும் இலக்குடன் செயற்பட்டவர்கள்.

அரசியல் கட்சிகள் மக்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளன. மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையிலேயே கட்சிகள் அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. இக்கட்சிகள் காலத்துக்குக் காலம் எடுக்கும் முடிவுகளுக்கான காரணங்களை விளக்கிக் கூறுவதையே மக்களுக்குப் பதில் கூறல் என்பர். இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது எடுத்திருக்கும் முடிவு பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

இதுவரை காலமும் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுத் தனிநாட்டுப் பாதையில் சென்றது தவறு என்பதை ஒத்துக்கொள்கின்றார்களா? அப்படியானால் ஏன் அந்தத் தவறைச் செய்தார்கள்? அப்படி இல்லையென்றால் இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு வெறும் தந்திரோபாயமா? மீண்டும் தனிநாட்டு வழியில் செல்வார்களா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்தகால பாரம்பரியம் மக்களுக்கு விளக்கமளிக்காமலே முடிவுகளை மாற்றுவதாக இருந்தது. ஆரம்பத்தில் சமஷ்டி. அதன் பின் தனிநாடு, பின்னர் மாவட்ட சபை. அதற்குப் பின் அரசியல் தீர்வு. மீண்டும் தனிநாடு. இப்போது மீண்டும் அரசியல் தீர்வு.

காலத்துக்குக் காலம் கொள்கையை மாற்றிய வேளைகளில் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு கொள்கையை மாற்றினார்கள். என்ன செய்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை அப்போது இவர்களுக்கு இருந்தது. இன்று அந்த நம்பிக்கை இருக்க முடியாது. இவர்களை முழுக்க முழுக்க நம்பிய மக்கள் இன்று நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களை இன்றைய இடர் நிலைக்குத் தள்ளியதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பிரதான பங்கு உண்டு. கடந்தகால நிலைப்பாடு பற்றியும் இன்றைய நிலைப்பாடு பற்றியும் இவர்கள் மக்களுக்கு விளக்கம் அளித்தாக வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com