Monday, June 22, 2009

தமிழ் இனவாதத்தை தோற்கடித்தோம், சிங்கள இனவாதத்துக்கு இடமளியோம்: ராஜித

இலங்கையில் தமிழ் இனவாதிகளைத் தோற்கடித்த அரசாங்கம், சிங்கள இனவாதிகள் எதிர்க்கிறார்கள் என்ற காரணத்துக்காக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதென்ற யோசனையைப் பின்வைக்கப்போவதில்லையென நிர்மாண மற்றும் பொறியியல்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார்.

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர், விடுதலைப் புலிகள் என்ற இனவாதிகளைத் தோற்கடித்திருக்கும் நிலையில், சிங்கள இனவாதத்துக்கு இடமளிக்கப்போவதில்லையெனத் தெரிவித்தார்.

“அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடிவருகிறோம். மாகாணங்களுக்குக் குறைந்தளவிலான பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க இணக்கம் காணப்பட்டு வருகிறது” என்றார் அமைச்சர்.

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் யாவும் ஆதரவளிக்குமெனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

உயிரைப் பணயம் வைத்தாவது தடுப்போம்

அதேநேரம், உயிரைப் பணயம் வைத்தாவது 13வது திருத்தத்தை அமுல்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை முறியடிப்போமெனத் தேசப்பற்றள்ள தேசிய இயக்கம் சூழுரைத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 13வரு திருத்தத்தை அமுல்படுத்தி துரோகச் செயலொன்றைச் செய்ய முற்பட்டால் அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தாம் அனுமதிவழங்கப் போவதில்லையெனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இனரீதியாகப் பிரித்து நாட்டின் ஐக்கியத்தை நலிவடையச் செய்யும் சதித்திட்டம் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சர்வதேச சதிவலைக்குள் இலங்கை சிக்கிவிடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது.

இதேவேளை, இனப்பிரச்சினைத் தீர்வுதொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி யோசனைத் திட்டம் 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமையாது என அக்குழுவின் தலைவரும், அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறியுள்ளார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆலோசனைப் படியே இந்த யோசனைத் திட்டம் தயாரிக்கப்படுமெனவும், எனினும் 13வது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்யவே தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்து விடயங்களிலும் இணக்கப்பாட்டுக்கு வந்துவிட்டன. நாம் தற்பொழுது இறுதி யோசனைகளைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் கூடிய விரைவில் இறுதி யோசனைத் திட்டம் முன்வைக்கப்படும்” என அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment