Thursday, June 25, 2009

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அடிப்படையாகக் கொண்டே சர்வஜன வாக்கெடுப்பு

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்கும் இறுதியோசனைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக தீர்வொன்றை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு, அரசியலமைப்பு மாற்றமொன்றைப் பரிந்துரைக்கவிருப்பதாகவும், இந்த அரசியலமைப்பு மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமெனவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன கூறினார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டத்தை அடிப்படையாகக்கொண்ட அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாகவே தீர்வொன்றை முன்வைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம், 13வது திருத்தத்தை இலகுவில் நீக்கிவிட முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், 13வது திருத்தமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விடயமென்பதால் அதனைத் தடுக்க எவராலும் முடியாதெனவும் அவர் கூறினார்.

மாகாணசபை மற்றும் பிரேசபை முறைகளை ஏற்றுக்கொண்டே ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகள் அவற்றுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், 13வது திருத்தத்தை எதிர்ப்பவர்களாயின் ஏன் அவர்கள் இந்தத் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள் எனக் கேள்வியெழுப்பினார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான மோதல்களில் அரசாங்கம் வெற்றிபெற்றிருப்பதால் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்கும் முயற்சிகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார்.
Thanks INL

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com