புலி உறுப்பினர்களின் குரல்வளைகளை நசுக்கும் புலம்பெயர் புலித்தலைமை. -ஒர் புலி யின் மடலில் இருந்து சில துளிகள் -
புலிகளியக்கம் அஸ்தமனமாகிப் போயுள்ள இத்தருணத்தில் புலி உறுப்பினர்களது குரல்வளைகைள் புலம்பெயர் புலித்தலைமையால் நெரிக்கப்படுகின்றது. ஆங்காங்கே பதுங்கியிருக்க கூடிய புலி உறுப்பினர்கள் பல உண்மைகளையும் தமது துயரங்களையும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள புலி ஊடகங்கள் அனுமதிக்காத ஓர் துர்ப்பாக்கிய நிலைதோன்றியுள்ளது.
பிரபாகரனின் மரணத்தின் பின்பு புலிகளியக்கத்தின் புலம்பெயர் வலையமைப்பில் தோன்றியுள்ள பிளவுகளினூடாக அவ்வியக்கத்தின் பிரச்சார ஊடகங்களும் பிளவுபட்டு நிற்பதுடன் கடந்த காலங்களில் ஒருவரை ஒருவர் சாடியும் தூற்றியும் வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இந்நிலையில் புலிகளியக்கத்தினுள் இறுதிநேரத்தில் நடந்த நிகழ்வுகள், தோல்விக்கான காரணங்கள், எஞ்சியுள்ள ஒருசில உண்மையான புலிகளின் மனநிலை, அவர்கள் மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பது போன்ற விடயங்களை கூற அவர்களில் சிலர் முனைகின்றபோதும் அவர்களது குரல்வளைகள் நசுக்கப்பட்டுள்ளதை உணரமுடிகின்றது.
ஆனால் அவர்கள் அனுங்கும் சத்தம் அவர்களது ஏக்கங்கள் சில புதிய புதிய இலவச இணையச் சேவைகளுடாக வெளிவந்தவண்ணம் உள்ளது. அவ்வாறு புலிகளின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர் என தன்னை இனம்காட்டியுள்ள அரவிந்தன் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதற்கான மூலகாரணமாக அதன் உறுப்பினர்கள் நம்பும் பல விடயங்கள் தெளிவாகின்றது.
அக்கட்டுரையில் அரவிந்தன் படையினரின் பகுதிகளுள் தான் ஊடுருவி இருந்தாகவும் அப்போது "படையினர் புலிகளின் செல்லடிகளுக்கு மிகவும் அஞ்சி ஓடுப்பட்டு திரிந்தாகவும் கூறும் அவர், துரதிஸ்டவசமாக அவனுக்கு தலையிடி கொடுக்க எம்மிடம் செல்கள் கையிருப்பில் இருக்கவில்லை என்பதை அவன் எப்படி அறிவான்?" எனக் கேட்டிருந்தார்.
எனவே புலிகளது ஆயுதக் கையிருப்பு முடிவுற்றிருக்கின்றது என்பதும் அவர்கள் ஆயுத விநியோகித்தர்களால் எமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் அவரது மேற்படி கூற்றிலிருந்து தெளிவாகின்றது.
"சரணையடைய கைகளை தூக்கிய விடுதலைப்புலிகள் சுடப்பட்டனர்." என அக்கடிதத்தில் கூறப்படுகின்றது. ஆகவே புலிகள் எந்த ஒரு காலகட்டத்திலும் எதிரியிடம் சரணடைய வில்லை என புலம்பெயர் புலிகள் மேற்கொள்ளும் பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்பதும் புலிகள் எந்த காலகட்டத்திலும் சரணடையமாட்டார்கள் என்ற பரப்புரையாளர்களின் பரப்புரையும் நாம் சரணடைவதற்கு தயாராக இல்லை என நடேசன், புலித்தேவன், சூசை போன்றோர் கடைசி நேரம் வரை கூறிவந்தது யாவும் மக்களை ஏமாற்றவே என்பதும் வெளிப்படையாகின்றது. ஆனால் அவர்கள் அந்த சரணடைதலை சட்ட ரீதியாக மக்களின் அனுசரணையுடன் மேற்கொண்டிருந்தால் அவர்கட்கு அந்த நிலை வந்திராது என்பதுடன் பல நூற்றுக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் காப்பாற்றி இருக்க முடியும் என்பதும் நிச்சயமாகும்.
"எமது மக்கள் இறுதிவரை எம்முடன் நின்று எம்மைப் பலப்படுத்தினார்கள். இப்போது அவர்கள் எங்களாலேயே ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதை சர்வதேசம் திறம்பட செய்தது. எம்மை போரிட செல்ல விடாமல் ஒரு தீர்வை எமது மக்களுக்கு நாட்டை பெற்றுத்தருவோம் என மறைமுக வாக்குறுதிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் போன்ற தோற்றத்தையும் காட்டி நாம் இறுதியில் ஏமாற்றப்பட்டோம். இதை தமிழர் பரம்பரை உள்ளவரை மறக்க முடியாது" என கூறி தாம் மக்களை இரும்புப் பிடியில் பலவந்தமாக வைத்திருந்த விடயத்தை மூடி மறைத்திருக்கும் அரவிந்தன்,
தமக்கான அரசியல் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக கூறிய சர்வதேச நாடுயாது? அதன் முகவர்கள் யார்? எவ்வாறான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன போன்ற விடயங்களை தெளிவாக கூறாமல் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி சர்வதேச சமூகத்தின் மீது பழியைபோடுவதுடன் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல முற்படுவதை உணரமுடிகின்றது.
"எனக்கு ஒரு சந்தேகம். நாம் சரணடையும் பரம்பரையில் வந்தவர்கள் அல்லவே. எப்படி 10000க்கும் மேற்பட்ட புலிகளை சரணடையச் செய்ய முடிந்தது என்பதே. அதற்கான விடைகளை நீங்கள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கான ஆரம்ப வித்து தூவப்பட்டது சமாதான உடன்படிக்கையில் என்பதே. 36 வருடங்களாக போராடிப் போராடி எங்கள் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து இருந்தார்கள் என்பது உண்மைதான். அதனால் எல்லோரும் ஓர் போர் நிறுத்தத்தை விரும்பியது என்னவோ உண்மை ஆனால் அதுவும் சர்வதேச நிர்ப்பந்தத்தில் தான் என்பதை உலகே அறியும்." என உண்மை நிலையை கூறி அதை நியாப்படுத்துவதற்கு வசனங்கள் இல்லாமல் அரவிந்தன் திக்குமக்காடுவதை உணரமுடிகின்றது.
போராளிகள் சோர்வடைந்திருந்ததும் மக்கள் சமாதானத்தை வேண்டியிருந்ததும் உண்மையாயின் போராட்ட இயக்கமொன்று அம்மக்களினதும் போராளிகளினதும் விருப்பிற்கு மாறாக ஏன் போரை தொடுத்தார்கள் என்ற கேள்வியை அரவிந்தன் தனது தலைமையிடம் ஏன் கோரவில்லை என்பது வியப்பிற்குரியது. அத்துடன் சமாதான ஒப்பந்தம் கூட சர்வதேச சமூகத்தின் நிர்பந்தத்தில் உருவாக்கப்பட்டது என்பதை அவர் கூறுகின்றார் எனவே புலிகள் நிர்பந்தத்தின் அடிப்படையில் சமாதான உடன்படிக்கைக்கு சென்று அதை திட்டமிட்ட முறையில் முறித்துள்ளார்கள் என்ற உண்மையும் அரவிந்தனால் வெளியிடப்பட்டுள்ளது.
"சமாதானத்திற்கு முன் வீரனாக இருந்தவன் எப்படி கோழையாக மாற்றப்பட்டான் என்பது மிகவும் சுவாரஸ்சியமானவை." எனக்கூறும் அவர் பல சுவாரஸ்யமான கதைகளையும் கூறியள்ளார். ஆனால் அதற்கு முந்திய பந்தியில் போராளிகள் போராடிக் களைத்து சமாதானத்தை வேண்டிநின்றார்கள் என்ற விடயத்தை அவரே கூறியிருந்தார். ஆகவே அவர் குறிப்பிடும் நபர் தொடர்ந்து போராடுவதற்கு மனமில்லாமல் உடைந்தார் என்பதை வெளிப்படையாக கூறாமல் அரவிந்தன் அதற்கு கூறும் காரணங்களுக்கு கேலிக்கிடமானவை.
"சமாதான காலத்தில் எம்முடன் எங்கள் மக்களுக்காக பாடுபட்ட ஒரு ஐ.நா தொண்டு நிறுவன தலைமை பெண் அதிகாரி பாம்பு கடிக்கு இலக்கானார். உடனே வந்தது இராணுவ கெலி. என்னடா கெலி வருகிறது எனப் பார்த்தால் உண்மையில் அவர் ஒரு இராணுவ மேஜர் ஜெனரலுடைய மனைவி. ஆனால் அவருக்காக எங்கள் முகங்கள் கூட திறந்தே கிடந்தன. அவரும் எங்களுக்கென்றால் தனது வாகனத்தைக் கூட பரிசளிப்பார்.
திறமையான அப்படி ஒரு ஊடுருவல். இதே போல் பல நிறுவனங்கள் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டன."
"நாம் சாமாதானத்தின் பின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு பரப்புரைகளுக்கு போய் வந்தோம். அங்கு எம்முடன் தொடர்பை ஏற்படுத்திய பல வல்லவர்கள் ஒர சில இராணுவ வீரர்களை கொண்று தமது வீரப் பிரதாபங்களை எமக்கு காட்டுவார்கள். நாங்களும் அவரை விட்டால் ஆள் இல்லை என நினைத்து பழைய ஆட்களைப் பின்னுக்கு தள்ளி அவர்களை புதுப் புலிகளாக சேர்த்துக் கொள்வோம். அவர்களும் நம்பிக்கையாக நடந்து கொள்வார்கள். பின்பு முக்கிய தளபதிகளுடைய மெய்ப்பாது காவலர்கள் அல்லது முக்கியமான வேலைகளை செய்து கொண்டு இருக்கும் நபர்கள் ஆகிவிடுவார்கள்."
"இது எங்கே கொண்டு விட்டது தெரியுமா?
ஒரு சிலர் ஆவணங்களுடன் கம்பி நீட்டினர்.
பல தோல்விகளுக்கும் காரணமே கண்டு பிடிக்கப்படவில்லை இன்று வரை.
ஒர சிலர் திறமையாக இறுதிவரை இருந்து இறுதியில் தப்பி வந்தனர்.
அவர்கள் எல்லோரும் இறுதியாக சரணடைய வரும் மக்களோடு வந்த விடுதலைப்புலிகளை பெயர் கூறி வரவேற்றனர்."
"ஒரு சிலர் இராணுவ சீருடையில் இருந்தனர். தாம் இராணுவம் என வெளிப்படையாக அறிவித்தனர் எங்கள் எல்லோருக்கும் கண்ணீரைப் பரிசளித்த தமிழ் உத்தமர்கள் இவர்கள்.
மலையகம் மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளை சேர்ந்த தமிழர்கள்.
நாமும் சிங்களம் தெரிந்த புலிகளைத்தானே விரும்பினோம். அதனால் இராணுவம் எமக்கு கொடுத்த அன்பளிப்பு அவர்கள்.
இப்படித்தான் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்தார். தொப்பியும் முகத்துக்கு கறுப்புத் துணியும் கட்டியிருந்தார். எல்லோரையும் பாடசாலை மாணவர்கள் போல் இருத்திவிட்டுக் கேட்டார். இதில் புலிகள் இருந்தால் சரணடையுங்கள் என. யாரும் எழும்பவில்லை. அவர் ஒரு சிலரை சுட்டிக்காட்டி நீ இந்த படையணியில் இருந்த நீ! உனது பெயர் இது எனக் கூற,
அவர்கள் இல்லை என மறுத்தனர். வந்தவன் ஒரு இகழ்ச்சி சிரிப்பின் பின் தொப்பியைக் கழட்டிக் கேட்டான். என்னைத் தெரியுமா? என்ன யாரும் பதில் சொல்லவில்லை. முகத் துணியைக் கழட்டினான். ஒரு சிலர் குனிந்து அழுதனர். பதில் சொல்ல மறுத்த பலர் தலை குனிந்து இருந்தனர். அவனே கதைக்கத் தொடங்கினான். நான் ஒரு இராணவவீரன். சமாதான காலத்தில் ஊடுருவியிருந்தேன். நான் 'கேணல் சாள்ஸ்க்கு பொடிக்காட்டாக இருந்திருக்கிறேன்';.
"அவருக்கு கிளைமோர் அடித்துக் கொன்றதும் நான் தான் என்றும், சில திகதிகளில் வன்னிக்குள் பஸ் வண்டிகள் மீது நடந்த தாக்குதல்களையும் தான், தான் வழி நடாத்தியதாக சொன்னான். எப்படியிருக்கிறது?"
இவ்வாறு இலங்கை இராணுவத்தின் இராணுவ மற்றும் புலனாய்வு , ஊடுருவல் திறமையை கூறியிருக்கின்றார். எதிரி தன்னுடைய விலங்கை எந்த வழியிலும் மாட்ட முயற்சிப்பான் என்பது போர்த்தந்திரம் அறிந்த குழந்தை கூட அறிந்திருக்கும். எனவே எதிரியின் விலங்கை உடைப்பதற்கு தகுதியவாய்ந்தவனே வீரனாவான். ஆகவே நாம் கோட்டைவிட்டு விட்டோம் என்பதை ஓர் வீரச்செயலாக அரவிந்தன் சொல்ல முற்படகின்றாரா என்பது கேள்வி.
"ICRC இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதில் பணி புரியும் வெள்ளையர்கள் இராணுவத்திற்கு வேலை செய்கிறார்கள் என்பதை நிருபிக்க முடியாவிட்டாலும் எமக்கு அந்த சந்தேகம் நிஜம் என்பது தெரிந்து இருந்தது."
"உதாரணம் காயமடைந்த நோயாளர்களை ஏற்றிக் கொண்டு போகும் கிறீன் ஓசியன் கப்பலில் வரும் வெள்ளையினப் பெண் அதிகாரி வைத்தியசாலையில் வந்து எமது பிரதேச வைத்தியர்களுடன் ஒரு நாள் வாக்குவாதப்பட்டதை நான் நேரில் கண்டேன். காரணம் முந்நூறுக்கு மேற்பட்ட நோயாளர்களை ஏற்ற வந்ததாகவும் இப்போது நூற்றைம்பது வரையானோர் இருப்பதாகவும் கூறி ஓர் வெள்ளைப் பெண்மணி சண்டை பிடித்தார். ஏனெனில் கடும் காயக்காரர்களுக்கு மட்டும் நாங்கள் அனுமதியை வழங்கினோம்." எனக் கூறும் அரவிந்தன் தமது தோல்விக்கு மக்களுக்காக உதவிபுரிய வந்த ஐசிஆர்சியினரும் காரணம் என கூறுகின்றார். அத்துடன் அப்பெண்மணி 300 நோயாளர்கள் கொண்டு செல்லச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் நேரடியாகச் சண்டை பிடித்துள்ளார். ஆனால் புலிகள் நோயாளிகளைக் கூட வெளியேற அனுமதித்திருக்கவில்லை என்ற உண்மையை அரவிந்தன் தெளிவாக்கியிருக்கின்றார்.
புலிகளியகத்தில் இருந்து சண்டைகளில் காயமைடமந்து நிரந்தர அங்கவீனர்களாக்கப்பட்ட பலர் நவம் அறிவுக்கூடம் , மயூரி இல்லம் என பல பெயர்களில் அமைக்கப்பட்ட நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போராளிகளை புலிகள் விரும்பியிருந்தால் இக்கப்பலில் அனுப்பி அவர்களின் வாழ்விற்கு உதவியிருக்க முடியும் ஆனால் புலிகள் அவ்வாறு செய்யவில்லை. இறுதி நேரத்தில் அவர்கள் புலிகளினால் அழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
அதை விட இரகசிய உள் நுழைவுகளுக்கு UN வாகனங்களில் கூட இராணுவம் பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் இந்த நிறுவனங்கள் எங்களில் பிழை பிடிப்பதிலும் எங்களுக்க எதிராக மக்களை திசை திருப்புவதிலும் பெரும் பங்கை ஆற்றின என்று கூறுவதன் மூலம் புலிகள் மீது மனித உரிமை அமைப்புக்கள் வன்முறைகளை கைவிடுமாறும் மக்களை வெளியேற அனுமதிக்குமாறும் சிறுவர்களை படையில் சேர்க்க வேண்டாம் எனவும் பலத்த அழுத்தங்களை கொடுத்துவந்தார்கள் என்ற உண்மையை தெட்டத்தெளிவாக்கியுள்ளார்.
"பல நாடுகளுக்கு காலச் சந்தைகளில் ஆயுதங்களை விற்கும் இதே அமெரிக்கா எங்களையும் வாழ விடவில்லை. தனது நலனுக்காக எதையும் செய்யும் அமெரிக்கா பல நாடுகளுக்கு சுதந்திரத்தையும் ஆயுதங்களையும் பல நாடுகளை சூறாடியும் கொண்டு தனது விஸ்தரிப்பை செய்கிறது" என அமெரிக்காவை நேரடியாக சாடும் அரவிந்தன்.
"ஆயுதம் வாங்கினார்கள் என காட்டிக் கொடுத்தவர் ஒரு தமிழர். அவரையும் அவர் செய்த போதைப்பொருள் வியாபாரத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று அவர் காட்டிக் கொடுக்க வேண்டுமென கேட்கப்பட்டு, அவர் பின்பு அவர்களைக் காட்டிக்கொடுத்தார் என்பதை தகவலறிந்தவர்கள் சொல்கிறார்கள்." என அரவிந்தன் கூறுகின்றார். யார் அந்த தமிழன்? குறிப்பாக கள்ளச் சந்தையில் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்தவர் கேபி எனப்படும் குமரன் பத்தமநாதனாகும். பிரபாகரன் இறந்தற்கு கேபி சதிவலையை பின்னினார் என பலமான சந்தேகங்கள் இருக்கின்ற நிலையில் அரவிந்தன் குறிப்பிடும் ஆயுதக் கொள்வனவுக்காரரும் போதைப்பொருள் கடத்தல் காரரும் யார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
"இறுதியில் நாங்கள் பிள்ளை பிடிகாரராக சர்வதேச அரங்கில் பிரச்சாரப்படுத்தப்பட்டோம். போராளிகளைக் கள முனைகளில் இருந்து ஓட, பெற்றோர் ஊக்கம் கொடுத்தனர். விளைவு எதிரி எங்கள் வயல்கள் தாண்டி, கிராமம், நகரம் தாண்டி, எங்கள் வாசல்களை தாண்டி எம்மைச் சுட்டுக் கொன்றான்." எனவும் கலைஞர் போன்ற பெரியவர்களை நாம் நம்பி இருக்க, அவர்களும் எல்லாம் வெறும் அரசியல் தான் என தமிழினத்திற்கே புரிய வைத்ததிற்கு அவருக்கும் எங்கள் கை கூப்பிய வணக்கங்கள். என மிகவும் சோர்வடைந்த நிலையில் தனது பெரிதோர் மடலை அரவிந்தன் முடித்துள்ளார்.
அரவிந்தனது இம்மடலானது இலவச இணையம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்மடலை புலிகளின் ஊடகங்கள் எதுவும் பிரசுரிக்க முன்வராததன் காரணம் அவர்களுள் ஏற்பட்டுள்ள பிளவாகும். ஆனால் அம்மடலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் புலிகளின் கடந்த கால அராஜகங்களை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் அவ் அராஜகங்களை நியாயப்படுத்துவதாகவும் நொண்டிச் சாட்டுச் சொல்வதாகவும் அமைந்துள்ளமையால் அக்கடிதத்தை எம்மால் பிரசுரிக்க முடியவில்லை.
0 comments :
Post a Comment