இலங்கை இறுதிக்கட்ட தாக்குதலில் பலியான அப்பாவி தமிழர்கள் எண்ணிக்கையை மூடி மறைக்கவில்லை: பான் கி-மூன்
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக ராணுவம் நடத்திய இறுதிக்கட்ட தாக்குதலின்போது அப்பாவி தமிழர்கள் மட்டும் 20 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது. பிரான்சு மற்றும் இங்கிலாந்து நாட்டு பத்திரிகைகளில், கடந்த வாரம் இந்த தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பான ஆதாரங்களை மூடி மறைக்க ஐ.நா.சபை முயல்வதாகவும் இங்கிலாந்தின் டைம்ஸ் பத்திரிகை குற்றம் சாட்டி இருந்தது.
இந்த குற்றச்சாட்டை ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி-மூன் மறுத்து இருக்கிறார். ஐ.நா.பொதுச்சபையில் பேசிய அவர், "இறுதிக்கட்ட தாக்குதலில் பலியான அப்பாவி தமிழர்களின் எண்ணிக்கையை மூடி மறைத்து குறைத்துக்காட்ட ஐ.நா. சபை முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக (இந்த வார்த்தையை தொடர்ந்து இரண்டு முறை குறிப்பிட்டார்) மறுப்பதாக'' தெரிவித்தார்."அதேபோல், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை எத்தனையாக இருந்தாலும், இறுதிக்கட்ட தாக்குதலில் பலியானவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி மிக அதிகம்தான் என்றும் மீண்டும் மீண்டும் என்னால் திட்டவட்டமாக கூற முடியும். மொத்த எண்ணிக்கை தெரியவில்லை என்பதை நேர்மையுடன் ஒத்துக்கொள்கிறோம்.'' என்ற அவர், "மொத்த எண்ணிக்கை விவரம் இதுவரை தெரியவில்லை'' என்று கூறினார்.
அதேநேரம், இலங்கை மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியாது என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் கூறியிருந்தார்.
“இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவிருக்கலாம் அல்லது குறைவாகவிருக்கலாம். துல்லியமான தகவலைக் கூறமுடியாதுள்ளது. விசாரணை நடத்துவதே சிறந்தது என நாம் கூறுகிறோம்” என்றார் அவர்.
0 comments :
Post a Comment