Friday, June 19, 2009

ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைச் சந்தித்து, இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் மக்களுக்கான இறுதி அரசியல் தீர்வு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதெனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும், மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதியைச் சந்திப் பதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதாகவும், கூட்டமைப்பைச் சேர்ந்த முக்கி யஸ்தர்கள் சிலர் இந்தியாவுக்குச் சென்றிருந்ததால், சந்திப்பில் தாமதம் ஏற்பட்டதாகவும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. தெரிவித்தார். ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து, நேற்று வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும் சிவசக்தி ஆனந்தன் உறுதிப்படுத்தினார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) 19வது தியாகிகள் தின வைபவத்தில் பேசிய அவர், 20 வருடங்களுக்கு முன்னர் சனநாயக முறைப்படி தெரிவான வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண அரசுக்கு, உரிய அதிகாரங்களை வழங்காது தட்டிக்கழித்தவர்கள் அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியினர் எனக் குறிப்பிட்டதுடன், அன்றைய ஜனாதிபதி பிரேமதாசா புலிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட உறவின் காரணமாக 14 மாதங்கள் மட்டுமே இயங்கிய மாகாண அரசு கலைக்கப்பட்டது எனவும் சொன்னார்.

வெளிவட்ட வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வின் பின்னர் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது :- இலங்கை - இந்திய ஒப்பந்த பிரகாரம் 20 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட மாகாண அரசு முறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 30 வருட தமிழர்களுடைய உரிமை போராட்டம் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது. பல தமிழ் தலைவர்களையும், கல்விமான்களையும் இழந்துநிற்கின்றோம். யுத்தம் பெரு அழிவை ஏற்படுத்தியது. நாட்டைவிட்டு வெளியேறியவர்களுடைய தொகையினரை விட தற்போது நாட்டுக்குள் மூன்று இலட்சம் பேர் அகதிகளாக உள்ளனர்.

30 ஆயிரம் பேர் அங்கவீனமாகியுள்ளனர். மிதவாத தலைவர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள். ஆயுத போராட்டமும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற ஏக்கம் எமது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்றார்.

நன்றி.தினகரன்.

No comments:

Post a Comment