‘எனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது’ - சிவநாதன் கிஷோர் எம்.பி.
* தமிழ் மக்கள் இனியும் ‘அல்லல்பட முடியாது’
* தேசியம் பேசி எதுவும் சாதிக்க முடியாது
* எஸ். ஜே. வி. யின் தேசியப் போராட்டமும், பிரபாவின் போராட்டமும் பூஜ்ஜியமாகிவிட்டன
(லோரன்ஸ் செல்வநாயகம்)
“எனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் நான் எந்த கட்சியையும் சாராதவன்” என பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
அதேவேளை, எனது மாவட்டத்து மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் நான் எனது ஒத்துழைப்பை வழங்குவேன். நாளை வவுனியாவிலும் அடுத்து மன்னாரிலும் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வதும் உறுதியென அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் மீதான பிரேரணையின் போது நடுநிலை வகித்ததால் கிஷோர் எம்.பி.க்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளதாக சில பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையடுத்து அதுபற்றி அவரிடம் கேட்ட போதே கிஷோர் எம். பி. இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கஷ்டப்பட்ட மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே தாம் அவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்த அவர்; அவ்வாறு தமக் கெதிராக எவரும் விசாரணை நடத்த முடியாதெனவும் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டி ருந்தது. மக்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அதனால் அவசர கால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய தேவையொன்றிருந்தது. இப்போது அத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை.
எமது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் அவர்களிற்கான இயல்பு வாழ்க்கை தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே நான் செயற்பட்டு வருகிறேன்.
கொழும்பிலேயோ வெளிநாடுகளிலேயோ இருந்து கொண்டு எமது மக்களுக்கு எம்மால் சேவை செய்ய முடியாது. அதனால் நான் மக்களோடு எனது மாவட்ட த்தில் இருக்கிறேன். அவர்கள் இனியும் அல்லல்பட விடமுடியாது. அவர்களுக்கான கெளரவமான எதிர்காலம் அவசியம்.
நான் கட்சி விட்டு விலகப் போவதில்லை, அமைச்சர் பதவி இருந்தால்தான் மக்களுக்குச் சேவை செய்ய முடியுமென்பதில்லை. நான் செஞ்சிலுவைச் சங்கத்தின் இருந்து கொண்டே மக்களுக்குச் சேவை செய்தவன்.
தேசியம் தேசியம் என பிடிவாதம் செய்து இனியும் எதுவும் சாதிக்க முடியாது.
நமது மக்களின் நலன் நமக்கு மிக முக்கியம். தேசியம் பேசிய எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் போராட்டம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் பூஜ்ஜியமாகவே போனது, பிரபாகரனின் போராட்டமும் பூஜ்ஜியமாகி மக் களை நடுத்தெருவிற்கே கொண்டுவந்துவிட்டது.
அதனால் எமது மக்களின் எதிர்காலத்தை சுபீட்சம யமாக்க எமது மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதென தீர்மானித்துள்ளேன் எனவும் கிஷோர் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment