இறங்கு துறை. –வம்சிகன்-
மூன்று சகாப்தமாய்
யுத்தத்தின் சத்தத்தை
விழுங்கியபடியே
ஒரு முத்து
யுத்தம் குளித்தது.
கரையேறும்போது
மடியில்
ஒளி பிசைந்த
அமைதி.
இயற்கை
எழுதி முடித்து
இட்டுச்சென்ற
முற்றுப் புள்ளியாய்
இலங்கைத் தேசம்.
தரிப்புப்புள்ளியாய்த்
திருமலை.
இலங்கை
ஒரு
சமுத்திர மாங்கனி.
இரண்டாக வெட்டினால்
மூன்றாமவனே
முழுதாய்த்
தின்று தீர்ப்பான்.
அலைகள்
மோதி மோதிப்
பின்
அணைத்துச் சிரித்துப்
பேசிப் பேசித்தானே
வரைபடம் மாறாத
சமாதானம் காக்கின்றன
நான்கு
கரைகளோடும்.
புரிதலில்
நரைவிழுந்த
மணற்கூந்தல் கோதாமல்
அலைகளும் இருப்பதில்லை.
அனுபவக் கரையும்
கடலின் தலைநரையாய்
நுரைகளைப் பார்ப்பதில்லை.
நீண்ட காலம்
நீண்ட தூரம்
பெரும்
கண்ணீர்க் கடலைத்
தாண்டியபின்
தெரிகிறது
புதிதாய் ஒரு
துறைமுகம்.
0 comments :
Post a Comment