தமிழர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகள்: இலங்கைக்கு மன்மோகன் கண்டிப்பு
தமிழர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகளை வழங்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.
விடுதலைப் புலிகளை விட முக்கியமானது தமிழர்களின் உரிமைப் போராட்டம் என்பதை இலங்கை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கை அரசு உறுதியுடன் துணிவுடனும் செயல்பட்டு இலங்கைத் தமிழர்களுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும். அவர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து அவர்களது நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று நான் நம்புகிறேன்.
சம உரிமைகளைப் பெற்று சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என்ற தமிழர்களின் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவம் நடத்திய போரினால் வீடுகளை இழந்து அகதி முகாம்களில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கான நிவாரணப் பணிகளில் இந்தியா முக்கிய பங்காற்றும். இதற்காக ரூ. 500 கோடி நிதி இந்திய அரசு வழங்கும் என்று நான் ஏற்கெனவே அறிவித்துள்ளேன்.
இலங்கையில் இயல்பு நிலை திரும்பி தமிழர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்லவும் அவர்கள் தங்களது தொழில்களில் வழக்கம் போல் ஈடுபடவும் தேவையான அனைத்தையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றார் பிரதமர் மன்மோகன்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் தொடங்கிய பின்னர், சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இந்தியத் தரப்பில் இருந்து கண்டிப்புடன் கூறியிருப்பது இதுவே முதல் முறை.
தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்று ராஜபட்ச தொடர்ந்து கூறிவந்தாலும் இதுவரை அதற்கான திட்டம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் வீடுகளை இழந்து, தங்களது தொழிலை இழந்து அகதிகளாக அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் சுயமரியாதையுடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப இலங்கை அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதற்குப் பதிலாக தமிழர்கள் தங்களது இடங்களுக்கு திரும்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களையும் கண்ணி வெடிகளையும் முதலில் அப்புறப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில் தமிழர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகள், சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினமணி
0 comments :
Post a Comment