முத்தமிழ் முருகன் அவதரித்த வைகாசி விசாகம்
மாந்தர்கள் வாழ்வுடன் தொடர்புடையவை கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்கள். இவற்றில் அஸ்வினி முதல் ரேவதி வரை மொத்தம் இருபத்தேழு நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களின் சிறப்புகள், வேதங்களிலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
மேலும் தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாகக் கருதப்படுகின்றன. அவ்வகையில் வைகாசி விசாகமும் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.
முக்கியமாக வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் தேவர் இடுக்கண் தீர்த்தருளும் பொருட்டு முருகப் பெருமான் அவதரித்தருளினார். எனவே முருகப் பெருமானுக்குரியதாக வைகாசி விசாகம் மிளிர்கின்றது.
சிவபெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும் முருகப் பெருமான் விசாகமாக (கீழ்க் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கிக் கூறுகிறது.
சிவபெருமானுக்கு திருக்குமரனாயும், திருமாலுக்கு மருமகனாயும் விளங்குகிறார் சுப்ரமணியன் என்னும் குமரக் கடவுள். முருகன் ஞானமே வடிவானவர் என்பதால் ஞான ஸ்கந்தர், ஞான பண்டிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஞான மூர்த்தி அவதரித்த நன்னாளே வைகாசி விசாகம்.
இனி விசாகம் பிற தெய்வங்களுடன் மகான்களுடன் எவ்வாறு தொடர்புடையது என்று காண்போம்.
தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும். பஞ்ச பாண்டவரில் ஒருவனான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில் தான்.
புத்த பெருமான் அவதாரம் செய்ததும் வைகாசி விசாகத்தில்தான் என்று பெளத்த மதத்தினர் நம்புகின்றனர். ‘புத்த பூர்ணிமா’ என்று இதனை அழைத்து மாபெரும் சிறப்புடன் கொண்டாடுகின்றனர்.
லக்ஷ்மி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப் பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப் பூச்சு செய்வார்கள்.
இராம - இராவண யுத்தத்தின் போது விசாகம் அமைந்துள்ள கோள் நிலையையும் அது காட்டிய நன்மை, தீமைகளையும் மனதில் கொண்டே இராமன் போரிட்டு இராவணனை வதம் செய்து வெற்றி கொண்டார் என்பர்.
ராஜராஜ சோழ மாமன்னரின் சரிதத்தை நாடகமாக ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடகக் கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ராஜேந்திர சோழன் வழங்கிய ஆணை தஞ்சை பெரிய கோயில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளது.
இப்படி வைகாசி விசாக தினத்தின் (ஜூன் 5) பெருமைகள் வானளாவியது எனில் மிகையில்லை.
நன்றி தினகரன்
0 comments :
Post a Comment