Sunday, June 14, 2009

சவுதி பஸ் விபத்தில் 5 இலங்கையர்கள் பலி.

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தொன்றின் போது எரிந்து தீக்கிரையான 29 பயணிகளுள் ஐவர் இலங்கையர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அஸிஸியா பஸ் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் புறப்பட்ட பஸ்வண்டியை லொறி ஒன்று மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

மின்சாரத்தில் இயங்கும் மேற்படி பஸ் வண்டி தீப்பற்றி கொண்ட போது 25 தீயணைப்பு வண்டிகளும் டசின் கணக்கான அம்புலன்ஸ்சுகளும் ஸ்தலத்திற்கு விரைந்தன. ஆனால் நிலமையை கட்டுப்படுத்துவதற்கு எதுவுமே செய்ய முடியாது போய்விட்டது எனவும் ஒரு நிமிடத்தில் சகலதும் நடந்தேறியுள்ளது எனவும் பெருந்தெருக்கள் பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பஸ்சினதும் லொறியினதும் சாரதிகள் உயிர்தப்பியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி, உயிரிழந்தவர்களில் அதிகம் பேர் சவுதி பிரஜைகள் எனவும் 21 பேரது உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோரது உடல்கள் சாம்பலாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பஸ் கம்பனியின் தகவல்களின் அடிப்படையில் உயிரிழந்துள்ளவர்களில் ஐவர் இலங்கையர்கள், மூன்று இந்தியர்கள், இரண்டு சூடானியர்கள், ஒரு பாக்கிஸ்தானியர், ஒரு எகிப்தியன், ஒரு பங்களாதேசன் என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com