ஒரு பாசிஸ்ட்டின் மரணம். -தமிழரசன் பேர்ளின்- பகுதி 2
பிரபாகரனும் புலித்தலைமையும் முழுமையாக அழித்தொழிக்கப்பட்ட போதும் எந்த சந்தடியும் இல்லாது இருந்த இந்தஊடகங்கள் அவைகளை மறைத்து அகதியான வன்னித்தமிழ் மக்களைக்காக்கவரும்படி அழைப்புவிட்டன. வெளிநாடுகளிலுள்ள தமிழர்களாலேயே இலங்கைத் தமிழர்களைக் காக்கமுடீயுமென்று கெஞ்சிய இந்த ஊடகங்கள் அரச எதிர்ப்பு இயக்கங்களுக்கு வரும்படி மக்களை அழைத்தன. புலிகளின் மாவீரர் தினங்கள் மாமனிதர் நினைவுகள் ஆகியவற்றை நாள் முழுவதும் காட்டி சோகஇசை பரப்பினர். நேயர்களின் தொலைபேசி நேரடித் நிகழ்ச்சிகளை நடாத்தி கண்ணீர் வெள்ளங்களைக் கரை புரண்டு புகலிட நாடுகளில் ஓட விட்டவர்கள் இப்போ பிரபாகரனின் மரணத்தைக்கண்டு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு நின்றார்கள். செய்வதறியாது திகைத்தனர். அஞ்சலி நடத்தினால் பிரபாகரனின் மரணச்செய்தி மக்களை எட்டினால் புகலிடத்திலுள்ள புலிகள் முதல் ஊடகவியாபாரிகள்வரை ஒரேநாளில் காணாமல் போய் இருக்கும் நிலை இருந்தது. எனவே இவர்கள் பொய்களைப் பூசிக்கத் தொடங்கினார்கள்.
வன்னியில் தேசியத்தலைவர் கொல்லப்பட்டு அவரின் உடல் நாற்றமெடுக்கத் தொடங்கிய வேளையில் உலக ஊடகங்கள் எல்லாம் பிரபாகரனின் இறந்த உடலைக் காட்டிக்கொண்டிருந்தபொழுதில் தீபம் ஜி.ரீ.வி என்ற இரணடு நேர்மையழிந்த புலிப்பாசிச ஊடகங்களும் அரசு பொய்ப் பிரச்சாரம் செய்துகொண்டிருப்பதாக கூறினர். தமிழ்மக்களின் உண்மை அறியும் உரிமை இவ்வாறாகத் தடுக்கப்பட்டது. செத்துப்போன தேசியத்தலைவருக்கு அஞ்சலி செலுத்த அஞ்சலிக்கூட்டம் நடாத்தி வீரவணக்கம் செலுத்த ஆள் கிடையாமல் போனது.
பிரபாகரன் இராணுவத்திடம் தனது முக்கிய 300 புலிகள் புடை சூழ வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து பலவித அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. 25 வருடமாகப் பிரபாகரனும் புலிகளும் தமது கழுத்தில் கட்டியிருந்த சைனைட் குப்பியைக்கடிக்கவில்லை. தாமே மனித வெடிகுண்டுகளாக மாறி எதிரிமேல் மோதி வீரமரணம் எதையும் அடையவில்லை. புலித் தலைவர்கள் தாமாகச் சாகத்துணியவில்லை. மாறாக பல பத்தமாயிரம் பேரைப் போராடிச் சாக அனுப்பிவிட்டு தம் உயிர்களை மட்டும் காக்கமுனைந்த கோழைகளாக இவர்கள் தம்மைப்பற்றி மக்களிடம் வடிவமைத்திருந்த பிரமாண்டமான வீரநாயகர்கள் கதையாடல்கட்கு மாறாக அற்பர்களாகச் செத்திருக்கிறார்கள்.
சதாம் உசேன் போன்றவர்கள் தூக்கு மேடையில் தம்முன்பு ஆடிய தூக்குக் கயிறு முன்பு உறுதியோடு நின்று மரணத்தை எதிர்கொண்டார்கள். ஆனால் இந்தப் புலிப்பாசிசத் தலைமைக்குழுவோ 300 மீட்டர் தொலைவில் இராணுவம் வந்துவிட்ட வேளையில் கடைசிக் குண்டு இருக்கும்வரை போராடிச் சாகாமல் சரணடைந்தாவது தம் உயிர்களைக்காக்க முனைந்துள்னர். போரடினால் மரணம் 100 வீதம் நிச்சயம். ஆனால் சரணடைந்தால் உயிர்தப்ப உள்ள சாத்தியம் அதிகமாக உள்ளது என்பதால்தான் இவர்கள் சரணடைந்து மிகவும் இழிவான முறையில் மரணத்தை அடைந்துள்ளனர்.
செம்படைகள் பெர்லினை நெருங்கிக்கொண்டிருந்த போது செம்படைத்தளபதியாக மார்சல் சூக்கோவுக்கு தான் எல்லாவிதமான நிபந்தனைகளையும் ஏற்கத்தயாராக இருப்பதாய் கிட்லர் செய்திக்குமேல் செய்தி அனுப்பினான். பேசுவதற்கு எல்லா வகையிலும் முனைந்தான். ஆனால் செம்படை பாசிஸ்டகளுடன் பேச்சு இல்லை, அவர்களை அழித்து நிர்மூலம் செய்வதே இலக்கு என்று அறிவித்தது. இக்கட்டத்தில்தான் கிட்லர் தற்கொலை செய்தான். பாசிவாதி கிட்லருக்குத் தற்கொலை செய்யுமளவாவது துணிவு இருந்தது. தான் வளர்த்த நாயைச் சுட்டுக் கொன்றுவிட்டு நெருக்கமானவர்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
அவன் செம்படைகயின் கைகளிற் சிக்கியிருந்தால் 25 மில்லியன் சோவியத் மக்களைக் கொன்றதற்காக அவனைக் கண்டதுண்டமாக வெட்டியும் சுட்டும் கொன்றிருப்பார்கள். உலகில் மிக மோசமாக வதைபட்டுச் செத்த மனிதனாக அவன் இருந்திருப்பான். இத்தாலியப் பாசிஸ்ட் முசொலினியை அவன் தன் கூட்டத்தோடு தப்ப ஓடியபோது பாசிச எதிர்ப்புப் போராளிகளும் கொம்யூனிட்ஸ்டுகளும் பிடித்துச் சுட்டுக் கொன்று அவன் உடல் அழுகி நாற நாற ஒரு வாரத்திற் மேலாகக் கட்டித் தூக்கியிருந்தார்கள். அந்த வகையில் எமது தமிழீழத்தின் தேசியத் தலைவர் தனது கடைசி நேரத்தில் எதிரிகளிடம் பட்டபாடு மிகச் சாதாரணமானதாகும்.
தமிழ் சிறுவர் சிறுமிகளை உயிரோடு குண்டைக் கட்டி தற்கொலைப்போராளிகள் மனித வெடிகுண்டாக வெடித்துச்சிதற அனுப்பிவிட்டு அதற்கு தற்கொடை, உயிர்க்கொடை, உயிர் ஆயுதம் என்றெல்லாம் விதம் விதமாக தூயதமிழில் வீரவிளக்கம் தந்த பிரபாகரன் அவர்களை மாவீரர்களாக்கிக் கல்லறை கட்டிஎழுப்பிய மனிதன். அவர்களுக்கு எல்லாம் தலைவனாகத் தன்னை வரித்துக்கொண்டவர். இலங்கை இராணுவத்திடம் கை உயர்த்தி வெள்ளைக் கொடியுடன் சரண் புகந்து அவர்கள் கையால் சூடுவாங்கிச் செத்துள்ளார்.
பிரபாகரன் தலையில் இரணடு துவக்குச் சூடுகள் இருந்தததை இந்துப்பத்திரிகையாளர் ரெட்டி பிரபாகரனின் இறந்த உடலை நேரிற்கண்டு எழுதியிருக்கிறார்.
அவை பிரபாகரன் புலிகளின் மாவீரப் பண்புக் கேற்ப ஒரு போதும் தற்கொடை உயிர்க்கொடை எதுவும் செய்யவில்லை. தற்கொலை செய்பவர் இரண்டு தடவை தன்னைத்தானே சுட முடியாது. ஒரு தடவைதான் சுடமுடியும். ஆக மாவீரர்களின் மாபெரும் தலைவர் மாகோழையாக எதிரிகளின் கரங்களால் செத்திருக்கிறார். மாவீரர் நினைவு நாட்களில் புலிகளின் தொலைக் காட்சியிற் தோன்றி மரணத்திற்கு அஞ்சாத பெருவீரராக வீர உரை நிகழ்த்தியவர் எதிரியிடம் மண்டியிடாத தமிழ் மறவர்பற்றி வீரக் காதைகள் உரைத்தவர். இப்போ தன் வாழ்நாள் எதிரியாய் பிரகடனப் படுத்திய சிறீலங்கா சிங்களப் படை முன்பு மண்டியிட்டு தன் உயிர்காக்க முனைந்து சுயநலமியாக சாவால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார்.
'சுடவேண்டாம் நான்பேசத்தயார்' என்று கைகளை உயர்த்திய படி நிராயுதபாணியாகச் சரணடைந்த ரெலோ சிறீ சபாரத்தினத்தை 38 குண்டுகளால் சூட்டுக்கொன்ற புலிகளின் நினைவுகள் தனது மரணத்தின் கடைசிக்கட்டத்தில் ஒருவேளை எமது தேசியத் தலைவருக்கு நினைவுக்குள் நிழலாடி இருக்கலாம். கிட்டத்தட்ட 60000 பேருக்குமேற்பட்ட மனிதர்களின் மரணத்துக்குக் காரணமாகியிருந்த ஒரு மனிதன், பல ஆயிரம் மக்களை மனிதவதைமுகாம்களில் சிறைவைத்து வதைத்து நீதிவிசாரணையின்றிக் கொன்ற ஒரு பாசிச சர்வாதிகாரி, தன்உயிரும் தன்குடும்பத்தின் வாழ்வு மட்டும் வெல்லமாய் இனித்திருக்கிறது. உயிர்போனாலும் சரண்புகாத தமிழனை 'முதுகுக் கிடான் கவசம்' பேசிய பிரபாகரன் எதிரிகளிடம் உயிர்ப்பிச்சை கேட்டு சரண்புகுந்து அவமான சாவை எய்தியுள்ளார். பிரபாகரன் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லாப் பாசிஸ்டுகளும் அதிகாரம் இருந்தபோது இரக்கமற்ற கொடுங்கோலர்களாக இருந்துவிட்டு கடைசிக்காலத்தில் தோற்று ஓடி ஒழித்து அந்தரித்து அவமானப்பட்டு செத்தொழிந்த வரலாறுதான் இருக்கிறது.
புலிகள் வன்னியில் தம்மிடமிருந்து இராணுவபகுதிக்குத் தப்பிஓட முயன்ற 2000 த்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களைக் கொன்றார்கள். ஓரே தினத்தில் உருத்திரபுரத்தில் மட்டும் 200 பேரைக் கொன்றதாக புலிகளிடமிருந்து தப்பிவந்த தயா மாஸ்டர் கூறி இருக்கிறார். புலிகள் மக்களைப் பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு அரசு பிரகடனப்படுத்திய பாதுகாப்பு வலையத்தில் புகுந்து கொண்டு மக்கள் மத்தியில் இருந்துகொண்டு இராணுவத்தைத் தாக்கினர். புலி- இராணுவ யுத்தத்தின் இடையில் மக்கள் சிக்கி மரணம்அடையும் நிலையைப் புலிகளே ஏற்படுத்தினர்.
இறந்த மக்களின் உடல்களையும் காயப் பட்டவர்களையும் தமது ஊடகங்களின் மூலம் புகலிட நாடுகளில் காட்டி சிங்கள அரசு தமிழனைக் கொலை செய்வதாகக் கூறினார்கள். சர்வதேசரீதியாக இதைப் பிரச்சாரப் படுத்தினர். புலிகளின் தமிழ்நெற் பொய்ப் பிரச்சாரங்களை சீ.என்.என், பீ.பீ.சீ, டொச்சவெல வரை வெளியிட்டனர். புலிகள் தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த சமயம் புலித்தலைமை மேற்குலக ஏகாதிபத்தியங்களை அரசியல் இராணுவரீதியிற் தலையிடும்படி திரும்பத்திரும்பக் கோரியது. ஐநா படைகளும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையும் அனுப்பும்படி கேட்டார்கள். மேற்கு நாடுகள் இலங்கையில் நேரடியாகத்தலையீடு செய்யத் தக்க மனிதப்பேரவலம் நிகழ்வதான காட்சிகளை உருவாக்கினர். எவ்வளவு தமிழர்கள் அதிகமாகச் சாகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு தம்மைக் காக்கவல்ல சர்வதேச அபிப்பிராயங்கள் திரளுமென்று புலிகள் எதிர்பார்த்தார்கள்.
பிரபாகரன் வன்னியில் மேற்குநாட்டுச் செல்வந்தர்கள்போன்று நவீன நீச்சல் தடாகங்கள் பளிங்குக் கற்கள்பதிக்கப்பட்ட நவீன வசதி கொண்ட வீடுகள் இலங்கையில் எப்பாகத்திலும் மக்கள் கண்டறிந்திராத வகையில் அமைக்கப்பட்ட உலகமெல்லாம் தொடர்புகொள்ளக் கூடிய வகையில் நவீன தொடர்பு சாதனங்களைக் கொண்ட நிலவறைகள் இவைகளுடன் வாழ்ந்தவர். இதற்கு முன்பு கொழும்பு -7 எல்லாம் பிச்சை புகவேண்டும். பிரபாகரன் முதல் புலித்தலைமை எல்லாம் போர்ப் பிரதேசத்தில் பசிபட்டினியில் அடிபட்டுச்செத்தவர்களாகவா தென்பட்டனர்? வண்டி தொந்தியடன் கூடிய கொழுப்பேறி மின்னும் கன்னக்கதுப்புகள் தொங்கும் தாடைகள் வீங்கி முட்டிய களுத்துக்களுடன் உழைப்புக்கு மிஞ்சிய போசனை ஊட்டப்பட்வர்களாகக் காணப் பட்டனர்.
இதே சமயம் வன்னியில் வாழ்ந்த சாதாரண மக்களோ வளர்ந்துகிடந்த தாடி மீசை தலைமயிருடன் பரதேசிகளாகக் காட்சி அளித்தனர். குழிவிழுந்த கண்கள் கன்னங்களுடன் என்பு தோல் போர்த்தியிருந்தனர். வன்னி விவசாயிகள் அரையிற்கட்டிய துண்டுகளோடும் சில சமயம் கோவணங்களோடும் தமது கமங்களிலும் வெண்காயம் மிளகாய் தோட்டங்களிலும் உழைத்தனர். பெண்கள் 20 வயதிலேயே 40 வயதுத் தோற்றத்துடன் வற்றல் தொத்தலாக உயிர்தரித்திருந்தனர். 40, 50 வயதுப் பெண்கள் அந்த வயதிலேயே கிழ ஆத்தைகளாக ஆச்சிமாராக ஆகிப்போயினர். வன்னிக் குழந்தைகள் அரைப்பட்டினி காப்பட்டினியுடன் பேத்தைகளாகத் திரிந்தனர். இம்மக்கள்மேல் வரி வட்டி வேண்டிப் புலிகள் இச்சுரண்டலில் வாழ்ந்தனர். அவர்களின் உழைப்பினைக் கொள்ளை கொண்டனர்.
குடும்பங்களாகப் பிள்ளைகுட்டிகளோடு வயற்காடுகளில் இம்மக்கள் உச்சி வெய்யில் வரும்வரை உழைத்தனர். ஆடுமாடுகள் எருமைகளை மேய்த்தார்கள். பெரும் நெல்வயல்களில் இரவுக்காவற்கொட்டில்களில் பயிர்களை அழிக்கவரும் காட்டுமிருகங்களுக்குக் கண்விழித்துக் காவலிருந்தார்கள். ஆனால் புலித்தலைமையோ சீவியத்திலும் உழைத்திராதவர்களாக மண்வெட்டி, கோடாலி, பிக்கான் பிடித்திராதவர்களாக வெற்றிவேர்வை நிலத்தல் சிந்தியிராதவர்களாக குளிர்சாதன அறைகளிலும் நீச்சல் தடாகங்களிலும் காலங்கடத்த முடிந்திருக்கிறது. இப்படிச் சொகுசு வாழ்க்கையில் இருந்தவர்கள் மக்களைக் கொள்ளையிட்டு வாழ்ந்தவர்கள் எப்படிப் போராடி மரணிப்பர். எப்படி உயிராயுதமாகமாறி எதிரியுள் புகந்து வெடித்துச் சிதறி மடிவர்.
இது மேலே தொடர் கட்டுரைகள் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பாகங்கள் தொடரும் .. .. T111
0 comments :
Post a Comment