ஏவற்பேய்களாக வாழாமல் உண்மைகளை அறிய முற்பட வேண்டும்.
எல்லாரும் ஏறின குதிரையிலே சக்கடத்தார் ஏறிச் சறுக்கி விழுந்தாராம் என்பது போல மியா(M.I.A) என்று அழைக்கப்படும் மாதங்கி அருட்பிரகாசம் என்ற Rap இசைப் பாடகி புலியின் பிரச்சாரப் பீரங்கியாக முடுக்கிவிடப் பட்டுளார். தமிழ் சமூகத்திலுள்ள மாற்றவே முடியாத நோய் ஒன்று என்னவெனில் ஏதோ ஒரு துறையிலே புலமை அடைந்த ஒருவர், தான் அரசியலிலும் புலமையடைந்துவிட்டதாகப் பிதற்றும் வியாதி. இந்த நோயால் பாதிக்கப்பட்வர்களுள் ஒருவர்தான் மாதங்கி அருட்பிரகாசம். (அவரது கலைத் திறமையைப் பற்றி நாம் ஏதும் கூற வரவில்லை.)
மாதங்கியின் தந்தையான அருளர் என்று அழைக்கப்படும் அருட்பிரகாசம் ஈரோஸ் இயக்கத்தில் இருந்தவர். அவரது லங்காராணி கதை கூட அவர் தனித்து எழுதவில்லை என்பது ஈரோஸ்காரரே பலமுறை கூறிய உண்மையாகும்.
அதனால் தான் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயின்று வந்து பிரபாகரனுக்கு வெடிகுண்டு நுட்பத்தைக் தானே கற்றுக் கொடுத்ததாக அருளர் கூறியதைப் பிரபாகபரன் கேள்விப் பட்டால் பிரபாகரனால் அருளருக்கும் வெடி தீரும். மாதங்கிக்கும் வெடி தீரும். தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் ஞானப்பால் உண்டு எல்லா ஞானமும் பெற்ற ஒரேயொரு தலைவர் என்பதே புலித்தமிழர்களது கருத்தாகும்.
வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு படித்த காலத்தில் அவரது வகுப்பில் படித்த 31 பேர்களில் கடைசிப் பிள்ளையாக வருபவர். ஒரு பக்கம் தமிழ் எழுதுவதற்கிடையில் அனேக குறில் நெடில் பிழைகள் விடுபவர் பிரபாகரன். அவர் ஒரு கட்டுரையோ கதையோ எழுதியது கிடையாது. அவர் ஏதாவது ஒரு தடவையேனும் ஏதேனும் பள்ளியின் பிரத்தியேக செயற்பாடுகளில் பங்கு பற்றியது கிடையாது. பள்ளிக்கால இலக்கியக் கூட்டங்களிலோ, நாடகங்களிலோ பங்கேற்றது கிடையாது. சிதம்பராக் கல்லூரி வாசலில் கடற்கரையோடு அமைந்திருந்த விளயாட்டு மைதானத்தில் அவரது கால் பட்டது கிடையாது. அக்கல்லூரி சாரணர் இயக்கத்தின் பக்கம் தலைவைத்துப் படுத்ததும் கிடையாது. மற்றும் மல்யுத்தம், குத்துச் சண்டை, கறாட்டி போன்ற உடற்பல விளையாட்டைக் கற்க வேண்டுமென்று விரும்பியதும் கிடையாது. கையால் மண்வெட்டியோ,சுத்தியலோ, மீன்பிடி வலையையோ தொட்டு ஒரு வெள்ளைச்சல்லி உழைத்தது கிடையாது.
வாழ்க்கை முழுவதுமே வங்கிக் கொள்ளை மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கைலேயே வாழ்ந்த மனிதன் பிரபாகரன். எப்பொழுதுமே மனோ மாஸ்டர் அல்லது கலாபதியின் சையிக்கிள் கரியரில் இருந்தே பயணம் செய்பவர். அவரது பால்யப் பராய நண்பர்களின் கூற்றுப்படி அவருக்குச் சைக்கிள் ஓட்டவும் கூடத் தெரியாது.
ஒரு வெற்றுக் கோம்பையை என்ன மாதிரித் தமிழ் சமுதாயம், கல்லுக்குப் பால் எண்ணெய் வார்த்துக் குடமுழுகு கும்பாபிஷேகம் செய்து கடவுளாக்கினார்களோ அதே போலவே பிரபாகரனையும் கடவுளாக்கி வைத்துள்ளனர்.
இந்தப் பிரபாகரனுக்குக் கற்றுக் கொடுத்தவர் எவரும் கிடையாது. இதற்கு விதிவிலக்கு இந்த அருளர்தான். இந்த அருளரதும் ஈரோஸ்காரர்களதும் வண்டவாளங்கள் கொஞ்சமல்ல. ஒரு மாதத்திற்கு முன்னர் புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையே அருளர் சமாதானம் பேசுவதற்காக இலங்கை போயிருக்கிறார் என்று செய்திகள் வெளி வந்தன.
அருளரை அறிந்த ஈரோஸ் காரர்களுக்கு இது சிரிப்பான விடயமாக இருந்தது. 1986 இல் புலி ரெலோவைக் கொன்று குவித்த பொழுது, ஈரோஸ் ஏன் சகோதர இயக்கமான ரொலோ இயக்க அங்கத்தவர்களை காப்பாற்ற முற்படவில்லை என்று கேட்ட பொழுது, இப்பொழுது ரெலோவை அழிக்கிறார்கள். பின்பு மற்றய இயக்கங்களை அழிப்பார்கள். அதனூடு புலியும் பலவீனப்பட்டுப் போய்விடும். அதன் பின்பு ஈரோசே தமிழ்மக்களின் ஏக தலைமையாகிவிடும் என்றார்கள்.
லண்டன் கந்தசாமியை ஈரோஸ் கொன்றுவிட்டு கழிவு வாய்காலுக்குள் எறிந்து விட்டு அந்தப் பழியை மற்ற இயக்கங்களில் சுமத்த முற்பட்ட பொழுது, உண்மை கசியவே ஐரோப்பாவில் வாழ்ந்த ஈரோஸ்காரர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பிய பொழுது, சங்கர் ராஜி, அருளர் இருவருமே நாங்கள்தான் கொன்றோம். இதை உங்களுக்கு ஒத்துக் கொள்கிறோம். ஆனால் வெளியிலே சொல்லமாட்டோம் என்றார்கள். இவர்களோடு ஒப்பிடும்பொழுது இலங்கை அரசாங்கம் எவ்வளவோ மேல்.
இலங்கை அரசாங்கம் இனவாதம் காரணமாகத் தமிழர்களைக் கொல்கிறது என்று தமிழ் மக்கள் நம்பியிருந்தார்கள். ஆனால் தமிழர்களை தமிழரே ஏன் கொல்கிறார்கள் என்பதை மட்டும் தமிழர்கள் ஏன் கேட்காமல் இருக்கிறார்கள். அதுவும் கொஞ்ச நஞ்சமா? ஆருக்காவது தமிழ் மக்கள் மேல் அற்ப இரக்கம் இருந்தால் புலி கொன்ற தமிழர் தொகை எவ்வளவு என்று ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். அதையும் விடப் புலி கொன்ற புலிகள் எவ்வளவு என்று ஒரு கேள்வியையும் சேர்த்துக் கேட்டுப் பாருங்கள்.
உண்மை என்னவென்றால் இலங்கை அரசாங்கமளவு தமிழை வளர்த்தவர் ஒருவருமே இல்லையெனலாம். இலங்கையிலே பாடசாலைகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. தமிழ் சித்தியடையாது விட்டால், க.பொ.த பரீட்சையில் சித்தி பெற முடியாது. பாலர்வகுப்பிலிருந்து சர்வகலாசாலை வரை தமிழ் மூலம் கல்வி கற்கலாம். தமிழ் நாட்டிற் போய் தமிழில் ஏதாவது ஒரு பரீட்சையில் சித்தி பெற முடியுமா?
தொலைக்காட்சிகளிலே தோன்றும் இந்தியத் தமிழ் மேதைகள் கூட ஒரு நிமிடத்திற்கு ஆங்கிலம் கலக்காமல் பேசமாட்டார்கள். ஓரு தமிழ் நாட்டுச் சஞ்சிகையை எடுத்துப் புரட்டினால் தமிழில் மிகுந்த புலமையுள்ள இலங்கைத் தமிழர்களால்கூடப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆங்கிலக் கலப்பும் கொச்சைப்படுத்தலும் தான் இருக்கும். இந்தியாவிலே தமிழ் ஒரு பிரதேச மொழி. இலங்கையிலோ அது ஓர் அரச மொழி. தேசிய மொழி. இது மியாவுக்கும் தெரியாது. அனேக இலங்கைத் தமிழர்களுக்கும் தெரியாது.
இலங்கையிலே சுயபாஷைக் கல்வி அறிமுகப் படுத்தப்பட்ட பின்புதான் கணிதம், இராசயனம், பௌதிகம், உயிரியல் மெய்யியல், அரசியல் போன்ற எண்ணற்ற நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. மொழிபெயர்ப்புத் திணைக் களத்திற்கும் பாடவிதானத் திணைக்களத்திற்கும் இலங்கை அரசாங்கம் போதும் போதுமென்ற அளவுக்கு நிதியை ஒதுக்கிக் கொண்டே இருக்கின்றது. துறைசார் தமிழ் வித்தகர்களால் தமிழ் நூல்களை உலகக் கல்வி நிலை மட்டத்திற்கு மொழிபெயர்த்துக் கொடுக்க முடியவில்லை.
ஏனெனில் Terminolgies have to be understand by its historical usages என்ற மொழியியல் விஞ்ஞான விதிக்கேற்ப, தமிழ் மொழியின் கலைச் சொற்களை விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப பயன்படுத்த முடியவில்லை. 450 வருடமாக ஐரோப்பிய காலனி எஜமானர்களின் இனக்கொலை, கலாச்சார அழிப்பு காரணமாக, முன்பு பாவனையிலிருந்த கலைச் சொற்களும், விஞ்ஞான தொழில்நுட்ப சொற்களும் அழிக்கப்பட்டுவிட்டன.
காலனி ஆதிக்கத்தின் ஒரே காரணமாகக் காலாகாலத்தே முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சி நடவாததால் எமது பிரதேச மொழிகளது வளர்ச்சியும் குன்றிவிட்டது. இலங்கை அரசாங்கம் தமிழ்மொழியை வளர்த்ததற்கு ஈடாக எந்தத் தனிமனிதர்களது பங்களிப்போ, ஸ்தாபனங்களின் பங்களிப்போ இல்லையென்றே அடித்துக் கூறலாம்.
இந்த வரலாற்றை அறிந்திராத மியா போன்றோர் இலங்கையில் இன அழிப்பு, மொழி அழிப்பு இடம்பெறுகின்றது எனக் கூறுவதானது எமது இனத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் ஒரு நடவடிக்கையேயாகும்.
0 comments :
Post a Comment