Wednesday, May 27, 2009

பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவா?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதை தமிழோசையிடம் அந்த அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவர் என்று அறியப்பட்ட செல்வராசா பத்மநாதன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து புலிகளுக்கு ஆதரவான இணையதளம் என்று கருதப்படும் தமிழ் நெட்டில், இதற்கு எதிரான கருத்துக்கள் வெளியாயின. அதாவது, புலிகளின் தலைமை பாதுகாப்பாக இருப்பதாகவும், சரியான தருணத்தில் அதன் செயற்பாடுகள் மீண்டும் தெரியவரும் என்றும் செய்தி வெளியிட்டது.

இது தவிர, புலிகளின் வெளிநாடுவாழ் மக்கள் தொடர்பான துறை எனும் பிரிவு, தமது தலைமையின் வெளிப்படையான அனுமதியில்லாமல் எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்றும் தமிழ் நெட் கூறுகிறது.

ஆனால் இவர்களால் தலைமை என்று கூறப்படும் தலைவர்கள் இறுதிகட்ட போரில் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது. மேலும் இலங்கை ஆய்வாளர்களின் கருத்துக்களின்படி, புலிகளின் இந்த வெளிநாடுவாழ் மக்கள் தொடர்பான துறை எனும் அமைப்பு இதுவரை கேள்விப்படாத ஒன்றாகவே இருந்துள்ளது.

எப்படியிருந்தாலும் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டது தொடர்பான செய்தியை ஏற்பதா இல்லையா என்பது தொடர்பிலும், அடுத்து எப்படி செயற்படுவது என்பது தொடர்பிலும், விடுதலைப் புலிகள் அமைப்பினரிடையே பிளவுகள் தோன்ற ஆரம்பித்துள்ளது போலத் தெரிகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அடுத்து என்ன நடக்கக் கூடும்?


பிரபாகரன் அவர்களின் மரணம் தொடர்பான குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற நிலையில், இது தொடர்பில் தற்போது இரண்டு விதமான கருத்துக்களை கொண்டுள்ளவர்களின் நிலைப்பாடு வரும் நாட்களில் இறுதியான ஒரு வடிவம் பெறக் கூடும் என்று தோன்றுகிறது.

ஒன்று பத்மநாதன் அவர்களின் வழியை பின்பற்றுவது, அதாவது பிரபாகரன் அவர்கள் மரணமடைந்துவிட்டார் என்பதை ஏற்றுக் கொண்டு, ஜனநாயக ரீதியில் ஏதோ ஒரு வழியில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது.

மற்றது, தமிழ் நெட் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல, பிரபாகரன் கொல்லப்படவில்லை என்றும் அவர் வெற்றி கொள்ள முடியாதவர் என்கிற கருத்தையும் முன்னெடுத்துச் சென்று போராட்டத்தை தொடருவதாகும்.

ஆனால் தற்போதைய கேள்வி என்னவென்றால்,இந்த இரண்டு கருத்துக்களில் எது பலம் பெறும் என்பதே.

எப்படியிருந்தாலும் இனி விடுதலைப் புலிகள் எந்த வகையிலும் தலையெடுக்க அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கையின் பாதுகாப்புத் துறை செயலர் தெரிவித்துள்ளார்.

மேலும் இராணுவத்தின் பலத்தை ஐம்பது சதவீதம் அதிகரித்து மூன்று லட்சம் பேராக உயர்த்த தான் எண்னியுள்ளதாக அதன் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா அரச தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
Thanks BBC


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com