Thursday, May 21, 2009

முகாம்களுக்குள் தொண்டு நிறுவனங்களின் வாகனங்கள் செல்ல அரசாங்கம் தடை.


வன்னியிலிருந்து இடம்யெர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் வவுனியா மெனிக்பார்ம் முகாமுக்குள் நுழைவதற்கான அனுமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய முக்கிய முகாமாக விளங்கும் மெனிக்பார்ம் முகாமுக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் பிரதிநிதிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பதால், இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐ.நா. ஸ்தாபனங்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிவாரணப் பணிகள் தாமதமடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“மெனிக் பார்ம் முகாமின் வலயம்-2ற்குள் சர்வதேச செங்சிலுவைச் சங்கத்தின் வாகனங்கள் செல்வதற்கு அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மனிக்பாம் முகாமுக்கான அனைத்து விநியோகங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளது” என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜயரட்ன கூறினார்.

அதேநேரம், ஐ.நா. முகவர் நிறுவனங்களின் வாகனங்களையும் மெனிக்பார்ம் முகாமின் வலயம் 1,2 மற்றும் 3 ஆகியவற்றுக்குச் செல்ல அரசாங்கம் தடைவித்துள்ளது என கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வெயிஸ் தெரிவித்துள்ளார்.

“இந்தத் தடையுத்தரவால் நிவாரணங்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாங்கள் தற்பொழுது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். திடீரெனப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் தடையுத்தரவுக்கான காரணம் எதனையும் அரசாங்கம் கூறவில்லை” என்று அவர் கூறினார்.

இடம்பெயர்ந்தவர்கள் மீதான அக்கறையாலேயே இந்தத் தீர்மானம்

இதேவேளை, இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் நன்மை கருதியே மெனிக்பார்ம் நலன்புரி நிலையத்துக்குள் நுழையும் வாகனங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது என அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

“முகாம்களுக்குள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றிருப்பதாக இடம்பெயர்ந்தவர்களிடமிருந்து எமக்குப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே, பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாதவாறு முகாம்களுக்குள் பொருள்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள நாம் தீர்மானித்தோம்” என்றார் அமைச்சர்.

எனினும், புதிய போக்குவரத்துத் திட்டம் குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் இதுவரை இறுதிப்படுத்தப்படவில்லையென அவர் தெரிவித்தார்.

மனிதநேய உதவி நிறுவனங்கள் தமது உதவிகளை நிறுத்தினால் அதற்குப் பதிலாக அரசாங்கம் நிவாரண உதவிகளை வழங்குமெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.Thanks. Inllanka

No comments:

Post a Comment