Thursday, May 14, 2009

பாதுகாப்புச் சபையில் முதன்முறையாக இலங்கை விடயம் ஆராய்வு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் முதன் முறையாக இலங்கை விடயம் உத்தியோகபூர்வமாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்படும் வீதம் அதிகரித்துள்ளமை பற்றி அங்கு குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன.

"இலங்கையின் வடபகுதியில் மோசமடைந்திருக்கும் மனிதநேய நிலைமைகள் குறித்துப் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருந்தனர். குறிப்பாக கடந்த சில நாட்களில் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் பெரும் கவலையடைந்துள்ளனர்" என ஏகமனதாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் 15 நாடுகள் அங்கம் வகிக்கும் பாதுகாப்புச் சபையில் பல தடவைகள் உத்தியோகபூர்வமற்ற முறையில் இலங்கை விடயம் கலந்துரையாடப்பட்டிருந்தது. எனினும், முதற்தடவையாக நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக இலங்கை விடயம் ஆராயப்பட்டுள்ளது.

ஷெல் தாக்குதல்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதுடன், கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நூற்றுக்காண பொதுமக்கள் ஆட்லறித் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்.

கடந்த வார இறுதியில் இலங்கையில் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தூதுவர்கள் சுட்டிக்காட்டியதுடன், இலங்கை விடயம் குறித்து உத்தியோகபூர்வமாக ஆலோசிப்பதற்கு ரஷ்யா, சீனா, வியட்னாம் மற்றும் லிபியா ஆகிய நாடுகள் உதவிசெய்யவேண்டுமெனவும் கூறியிருந்தனர்.

இலங்கை நிலைமை குறித்து பாதுகாப்புச் சபை பல்வேறு உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்களை நடத்தியிருந்தபோதும், ரஷ்யா, சீனா, வியட்னாம் மற்றும் லிபியா ஆகிய நாடுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்தன. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை அந்நாட்டின் உள்வீட்டுப் பிரச்சினை என அந்த நாடுகள் கூறிவந்தன.

அதேநேரம், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டிருப்பது சட்டரீதியான ஆவணமாக இல்லாவிட்டாலும், ஏகமனதாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையானது இலங்கைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கப்பயன்படும் என பாதுகாப்புச் சபையின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
ஐ.நா பாதுகாப்புச் சபைத் தலைவரின் பேச்சைக் கேட்க அழுத்துங்கள்

நன்றி ஐஎன்எல் இணையம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com